தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் கழிவுநீர் குழி தோண்டும்போது மண்ணில் புதைந்து ஒரு தொழிலாளி இறந்ததாகக் கூறப்படும் புகாரை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது

Posted On: 26 JUL 2025 1:46PM by PIB Chennai

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஜூலை 14, 2025 அன்று கழிவுநீர் குழி தோண்டும்போது 50 வயது தொழிலாளி ஒருவர் மண்ணுக்கு அடியில் புதையுண்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவரும் மற்ற தொழிலாளர்களும் 30 அடி ஆழ கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டிருப்பதாக ஆணையம் கண்டறிந்துள்ளது. எனவே, ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் அஜ்மீர் காவல்துறை ஆணையருக்கு இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை வழங்குமாறு தாக்கீது அனுப்பியுள்ளது. இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் சாத்தியக் கூறுகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 15, 2025 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் சுமார் 18 அடி ஆழத்தில் இருந்தபோது மண் திடீரென உள்ளே சரிந்து அவர் முழுவதுமாக அதன் கீழ் புதையுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தொழிலாளர்கள் தப்பி ஓடி உள்ளனர். காவல்துறையினர், பொது பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 6 முதல் 7 மணி நேர முயற்சிக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் உடலை வெளியே எடுத்தனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

****

(Release ID: 2148817)

AD/SM/SG


(Release ID: 2148896)
Read this release in: English , Urdu , Hindi