பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் தலைவராக திரு. நிதின் குப்தா பொறுப்பேற்கிறார்

ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்கள் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவும் பொறுப்பேற்றது

Posted On: 24 JUL 2025 4:24PM by PIB Chennai

திரு. நிதின் குப்தா, ஐஆர்எஸ் (ஓய்வு) ஜூலை 23, 2025 அன்று தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (NFRA) தலைவராக பொறுப்பேற்றுள்ளார். திரு. நிதின் குப்தா முன்னதாக ஜூன் 2022 முதல் ஜூன் 2024 வரை மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவராக பணியாற்றினார். வருமான வரித் துறை மற்றும் நிதி அமைச்சகத்தில் உள்ள முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அங்கு அவர் ஆட்டோமேஷன், முகமற்ற மதிப்பீடுகள் மற்றும் வரி செலுத்துவோர் சேவைகளில் முன்னோடி முயற்சிகளுக்கு தலைமை வகித்தார். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக, இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு (Big Data) பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவரது தலைமையின் கீழ், நேரடி வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சாதனை அளவை எட்டியது, மேலும் வரி வருவாய் ஆண்டுக்கு ஆண்டு நிலையான வளர்ச்சியைக் காட்டியது, இது பயனுள்ள நிர்வாகம் மற்றும் சிறந்த வரி செலுத்துவோர் தொடர்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் முந்தைய முழுநேர உறுப்பினர் திருமதி ஸ்மிதா ஜிங்ரான், ஐஆர்எஸ் (ஓய்வு), மத்திய கண்காணிப்பு ஆணைய முன்னாள் செயலாளர், திரு பி டேனியல், ஐடிஇஎஸ் (ஓய்வு), மற்றும் முன்னாள் தலைமை தணிக்கை இயக்குநர் (மத்திய ரசீதுகள்)  திரு சுஷில் குமார் ஜெய்ஸ்வால், ஐஏ&ஏஎஸ் (ஓய்வு) ஆகியோர் இந்த ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் பதவியையும் ஏற்றுக்கொண்டனர்.

திருமதி ஸ்மிதா ஜிங்ரான், தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் தனது முதல் பதவிக் காலத்தில், இந்தியாவின் தணிக்கை மற்றும் கணக்கியல் தரநிலைகளை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைப்பதிலும், நிதி அறிக்கை வெளியிடுதல் மற்றும் நிறுவன நிர்வாகத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றில்  முக்கிய பங்கு வகித்தார். தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் முழுநேர உறுப்பினராகச் சேருவதற்கு முன்பு, இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) செயலாளராகவும், வருமான வரித் துறையில் மூத்த பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

 

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் சேருவதற்கு முன்பு, மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் செயலாளராக இருந்த திரு பி. டேனியல், பொதுத்துறை நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் முழுவதும் கண்காணிப்பு விழிப்புணர்வு, தடுப்பு கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் குறித்த தேசிய நிகழ்வுகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். முறையான மேம்பாடுகள், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் தண்டனையிலிருந்து தடுப்பு கண்காணிப்புக்கு மாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார்.

திரு சுஷில் குமார் ஜெய்ஸ்வால், தணிக்கை மற்றும் கணக்கியலில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். தலைமை தணிக்கை இயக்குனராக (மத்திய ரசீதுகள்), மத்திய வருவாய் மற்றும் வரித் துறைகளின் தணிக்கைகளை மேற்பார்வையிட்டார் மற்றும் தணிக்கை விஷயங்களுக்கான மேல்முறையீட்டு அதிகாரியாக பணியாற்றினார். தணிக்கை முறைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் அவர் பங்களித்தார். சர்வதேச அளவில், அவர் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் (மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா) உள் தணிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்

23.07.2025 அன்று அமைச்சகத்தில் நடைபெற்ற விழாவில், தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்களுக்கு பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் செயலாளர், பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

***

(Release ID: 2147767)

AD/SM/DL


(Release ID: 2148084)
Read this release in: English , Urdu , Hindi