பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாட்டில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
19 JUL 2025 4:46PM by PIB Chennai
இந்தியாவில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை, தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த “வளர்ச்சியடைந்த பீகார்: பெண்கள் பங்கேற்பின் மூலம் ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதை, அதிகாரம் பெற்ற பெண்களாலும் இளைஞர்களாலும் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது நிர்வாகக் கட்டமைப்பை ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய நான்கு தூண்களை மையமாகச் சுற்றி அமைத்துள்ளது என்றும், பெண்கள் தொடர்ந்து முன்னணி இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெண்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தை மறுவடிவமைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.
பெண்கள் முதல் முறையாக சைனிக் பள்ளிகளிலும் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் அனுமதிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அறிவியல், தொழில்நுட்ப துறையில் அதிகாரமளித்தல், பொருளாதார - சமூக அதிகாரமளித்தல் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெண்களுக்காக 48 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். முத்ரா திட்ட பயனாளிகளில் 60 சதவீதத்து க்கும் மேற்பட்டோர் பெண் தொழில்முனைவோர் என அவர் குறிப்பிட்டார். சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடிக்கும் மேற்பட்ட லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றி வருகிறது என அவர் கூறினார்.
"இந்த அமைதியான புரட்சி இந்தியாவின் எதிர்காலத்தை மீண்டும் எழுதுகிறது, இதற்கு முதல் தலைமுறை பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தலைமை தாங்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.
தேசிய மனநிலையில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அது பெண்களின் பங்கேற்பைப் பற்றியது அல்ல எனவும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைப் பற்றியது என்றும் அவர் தெரிவித்தார். பெண்கள் முன்னணியில் இருக்கும்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு நனவாகும் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், பீகார் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷ்ரவன் குமார் உள்ளிட்டோரும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
*****
(Release ID: 2146086)
AD/PLM/SG
(Release ID: 2146116)
Visitor Counter : 2