மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் துறையில் குவாண்டம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் முன்னோடி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது
Posted On:
11 JUL 2025 4:29PM by PIB Chennai
டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் பொது சேவைகளில் இந்தியா உலகளவில் விரைவான வளர்ச்சி கண்டு வரும் நாடாக உருவெடுத்து வருகிறது. இருப்பினும், டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் இருந்தபோதிலும் சிவில் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் உட்பட ஏராளமான துறைகளில் முக்கியத் தரவுகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வும் முக்கியத்துவம் பெறுகிறது. குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் வழக்கமான குறியாக்க முறைகளைக் கடந்து மீள்தன்மை கொண்ட சைபர் பாதுகாப்பின் தேவையாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்வதற்கான முக்கிய படியாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அவசரகால கணினி மீட்புக் குழு மற்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான சிசா இணைந்து புதுதில்லியில் “குவாண்டம் தொழில்நுட்பம் - சைபர் பாதுகாப்புத் தயார்நிலை” என்ற தலைப்பில் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டன.
குவாண்டம் கம்ப்யூட்டிங் இன்று தொழில்நுட்பக் கோட்பாட்டு என்ற நிலையிலிருந்து நடைமுறை சார்ந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலகளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சியை விரைவுபடுத்தி வருகின்றனர். பாரம்பரிய குறியாக்க நடைமுறைகளில் உள்ள அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அடித்தளமாக இருக்கும் ஆர்எஸ்ஏ மற்றும் நீள்வட்ட வரைவுக் குறியாக்கம் போன்ற குறியாக்க வழிமுறைகள் அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாடற்ற நிலைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா போன்ற டிஜிட்டலைச் சார்ந்துள்ள பொருளாதார நாடுகளுக்கு, இந்த மாற்றம் தரவுப் பாதுகாப்பு, நிதிசார் பரிவர்த்தனைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை உருவாக்குகிறது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது குவாண்டம் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு குறியாக்க நடைமுறையாகத் தொடங்குவதற்கும், அதன் பயன்பாட்டுத் தயார்நிலையை உருவாக்கவும் ஒரு வழிகாட்டியாக இந்த அறிக்கை அமையும். இந்த அவசர நிலையை உணர்ந்து, குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவது குறித்த செயல்முறையை இந்த வெள்ளை அறிக்கை உணர்த்துகிறது. இது தற்போது நடைமுறையில் உள்ள கிரிப்டோகிராஃபிக் அமைப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தின் சாத்தியமான தாக்கத்தை பகுப்பாய்வு செய்கிறது. இணக்கமான நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளைப் பராமரிக்கும் அதே வேளையில், புதிய பாதுகாப்பு சார்ந்த நெறிமுறைகளை ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளில் ஒருங்கிணைப்பதற்கான நடைமுறை குறித்த அணுகுமுறைகளையும் இது பரிந்துரைக்கிறது.
இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், "குறிப்பாக சைபர் பாதுகாப்பில் குவாண்டம் தொழில்நுட்பங்களின் பாதுகாப்புத் திறனுக்கு தயாராக வேண்டியது அவசியம்" என்று வலியுறுத்தினார். மின்னணுத் துறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களை கடந்து செல்லும்போது, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் உள்ள உள்கட்டமைப்புகளில் தெளிவுடனும், விரைவாகவும் செயல்பட்டு சரியான தருணத்தில் மீள்தன்மையை உருவாக்கத் தொடங்குவது அவசியம். இந்த வெள்ளை அறிக்கை அதற்கான சரியான அம்சங்களை வழங்குகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இந்திய அவசரகால கணினி மீட்புக் குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹ்ல், “குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் டிஜிட்டல் பாதுகாப்பில் மாற்றங்களை உருவாக்கும் என்பதை அங்கீகரிப்பதாகக் கூறினார். எதிர்காலத்தில் இந்தியாவின் விரிவடைந்து வரும் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில் அதற்கான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சிசா நிறுவனத்துடனான ஒத்துழைப்பு, தனியார் துறை கண்டுபிடிப்புகளுக்கும் அரசின் உத்திசார் முயற்சிகளுக்கும் இடையிலான பொதுத்துறை - தனியார் பங்களிப்பின் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது. தேசிய அளவில் தயார்நிலையை உருவாக்க இதுபோன்ற கூட்டு நடவடிக்கைகளை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144023
**
(Release ID: 2144023)
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2144089)