பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் அதிநவீன டிஜிட்டல் அரங்கம் "சிருஷ்டி" - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
04 JUL 2025 3:41PM by PIB Chennai
மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம், மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (04.07.2025) புதுதில்லியில் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைமையகத்தில், அதிநவீன டிஜிட்டல் அரங்கமான 'சிருஷ்டி' என்ற அரங்கத்தையும் புதிதாக கட்டப்பட்ட 'சஹ்கர்' என்ற தேநீர் விடுதியையும் திறந்து வைத்தார்.
'சிருஷ்டி', என்பது அரசு ஊழியர்களுக்கும் துறை சார்ந்த வல்லுநர்களுக்கும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தையும், திறன் மேம்பாட்டையும் ஊக்குவிப்பதற்கான ஒரு முன்னோடி முயற்சியாகும்.இந்த அரங்கம் குறித்த ஒரு கையேட்டையும் "இந்தியாவில் பொது நிர்வாகம்" என்ற தலைப்பில் ஒரு சிறு நூலையும் அவர் வெளியிட்டார்.
51-வது பொது நிர்வாக உயர்நிலை தொழில்நிபுணத்துவதிட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை மற்றும் பொது நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், ராணுவ அதிகாரிகளுக்கும் சிவில் நிர்வாகத்திற்கும் இடையே அதிக அளவிலான ஒருங்கிணைப்பு தேவை என்று கூறினார். தற்போதைய துடிப்பான நிர்வாகச் சூழலில் குறுகிய பரப்புக்குள் பணிபுரிவது பயனளிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
வெள்ளம், பேரிடர் உள்ளிட்ட எந்தவொரு தேசிய அவசரநிலையாக இருந்தாலும், முதலில் மீட்புப் பணிகளில் களம் இறங்குவது ஆயுதப்படைகள்தான் என்றும் போர்க்காலத்தில் மட்டுமல்ல, அமைதிக் காலத்திலும், அவர்களின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது எனவும் அவர் தெரிவித்தார். இன்றைய நிர்வாகம் ஒரு கூட்டு, தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். வன்முறையாலும் தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினரும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட சிவில் அதிகாரிகளும் கூட்டாக பணியாற்றுவதால் சிறந்த முன்னேற்றங்களை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2142181
---
AD/TS/PLM/KPG/SG/DL
(Release ID: 2142293)
Visitor Counter : 3