எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பாக எஃகு அமைச்சகத்தின் தெளிவுபடுத்தும் உத்தரவு

Posted On: 02 JUL 2025 3:32PM by PIB Chennai

தரநிலைகளை அமல்படுத்துவதற்கான தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை எஃகு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடைசி தரக் கட்டுப்பாட்டு உத்தரவு ஆகஸ்ட் 2024-ல் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய தரக் கட்டுப்பாட்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-சின் தரநிலைகளின் கீழ் இறுதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான இடைநிலைப் பொருளான எஃகு பொருட்கள், தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, 2025 ஜூன் 13 அன்று எஃகு அமைச்சகம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. புதிதாக தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுடனான சமநிலை, தரமற்ற எஃகு இறக்குமதியைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த உத்தரவு அவசியமானதாகும். ஜூன் 13 ஆம் தேதி எஃகு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் காரணமாக விலை உயர்வு ஏற்படக் கூடும் என்ற அச்சம் ஆதாரமற்றது. இந்தியாவில் 200 மில்லியன் டன் எஃகு உற்பத்தித் திறன் உள்ளது. இது உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய போதுமானது. எனவே விலை உயர்வுக்கான சாத்தியக்கூறு இல்லை.

தரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுக்க பல நாடுகள் பலவிதமான வரிகளை விதித்துள்ளன. பிற நாடுகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளால், தரமற்ற எஃகு இந்தியாவிற்குள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால், அது உள்நாட்டு எஃகு தொழில்துறையையும், குறிப்பாக நாட்டில் உள்ள சிறிய எஃகு தொழில் துறையையும் கடுமையாக பாதிக்கும். இது லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதற்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக எஃகு நுகர்வு 12% க்கும் அதிகமாக வளர்ந்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டிற்கு 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 300 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி திறனும், 2035-ம் ஆண்டுக்குள் 400 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி திறனும் தேவைப்படும். இந்தத் திறன் உருவாக்கத்திற்கு 2035-ம் ஆண்டுக்குள் உத்தேசமாக 200 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதனம் தேவைப்படும். தரமற்ற மலிவான எஃகு இறக்குமதிகள் உள்நாட்டு எஃகுத் தொழிலை பாதித்தால், இந்த மூலதன திறன் நெருக்கடிக்கு உள்ளாகும். அதனால் எஃகுத் தொழில் திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே இந்த உத்தரவு தேவையானது என எஃகு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141513  

----

AD/TS/IR/KPG/KR/DL


(Release ID: 2141621)
Read this release in: English , Urdu , Hindi , Marathi