சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

11-வது சர்வதேச யோகா தினம்-2025

Posted On: 22 JUN 2025 2:55PM by PIB Chennai

"ஒரே பூமி,  ஒரே ஆரோக்கியத்துக்கு யோகா" என்ற கருப்பொருளின் கீழ் நேற்று (2025 ஜூன் 21 சனிக்கிழமை) 11வது சர்வதேச யோகா தினம் (IDY) கொண்டாடப்பட்டது. இந்தக் கருப்பொருள் தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் உலக ஆரோக்கியத்திற்கு இடையிலான தொடர்புகளை ஆழமாக வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் இந்நிகழ்வினை நன்முறையில் நடத்திட ஆயுஷ் அமைச்சகம் இந்தியா முழுவதும் மாநில ஒருங்கிணைப்பு  அலகுகளை (NIU) நியமித்திருந்தது. புதுச்சேரியில், சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் (SRRI) மாநில ஒருங்கிணைப்பு பிரிவாக நியமிக்கப்பட்டு இருந்தது  மற்றும் மருத்துவர் செ. சண்முகராம் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர்  பேராசிரியர்  என்.ஜே. முத்துகுமாரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், யோகா சங்கத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக,  புதுச்சேரி சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் பின்வரும் நிறுவனங்களுடன் இணைந்து ஜூன் 21,2025 அன்று யூனியன் பிரதேசம் முழுவதும் நான்கு செயற்கைக்கோள் நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது

பாண்டிச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி, அரசு மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து லாஸ்பேட்டை பல்நோக்கு மண்டபம் மற்றும் உட்புற விளையாட்டரங்கத்திலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து அதன் உள் விளையாட்டரங்கத்திலும், புதுச்சேரி

ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியின் பொறையூர் வளாகத்திலும்,  புதுச்சேரி

ஆச்சார்யா ஸ்ரீ சம்பூர்ணா வித்யாலயா – வில்லியனூர் பள்ளியின் வளாகத்திலும், நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த முக்கிய நிகழ்வுகளை தவிர்த்து, சுமார் 500 யோகா நிகழ்வுகளை யோகா சங்கத்தின்கீழ் சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்பறத்தை சேர்ந்த சுமார் 2 லட்சம் மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் தனிநபர்கள் பங்குபெற்றுள்ளனர்.

சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் உதவி இயக்குநர் ப. சத்தியராஜேஸ்வரனின்  தலைமையின் கீழ், ஆராய்ச்சி அலுவலர்கள் மரு. ஷியாமளா ராஜ்குமார், மரு. செ. சண்முகராம், மரு. ப. தேன்மொழி,  மரு. அ. லாவண்யா மற்றும் ஆராய்ச்சி உதவியாளர்கள் மரு. ரா. வினோதினி,மரு. அ. சிவா,  மரு. பா. வினு பாரதி,  மரு. ல. ஜெய்கனேஷ்,  மரு. அ. சகிலா பானு ஆகியோர் அடங்கிய குழுவால் இந்நிகழ்வுகள் நன்முறையில் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிகழ்வுகள் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான முழுமையான அணுகுமுறையாக யோகாவை முன்னிறுத்தி ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

****

AD/TS/RJ


(Release ID: 2138674) Visitor Counter : 4
Read this release in: English