நிதி அமைச்சகம்
மணிப்பூரில் நடத்தப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கையில் சுமார் ரூ.55.52 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது; ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்
Posted On:
09 JUN 2025 4:16PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியமான மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் ஜூன் 5-ம் தேதியிலிருந்து 7- ம் தேதி வரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம், சுங்கத்துறை, 17-வது பட்டாலியன் அசாம் ரைபிள்ஸ், மணிப்பூர் காவல்துறை ஆகியவை இணைந்து "ஆபரேஷன் ஒயிட் வெயில்" என்ற பெயரில் கூட்டு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது சர்வதேச சந்தையில் ரூ.54.29 கோடி மதிப்புள்ள 7,755.75 கிராம் ஹெராயின், ரூ.87.57 லட்சம் மதிப்புள்ள 6,736 கிராம் ஓபியம் ஆகியவற்றையும், ரூ.35.63 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தது. இரண்டு பாவோஃபெங் வாக்கி-டாக்கிகள் மற்றும் 1 மாருதி ஈகோ வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
2025 ஜூன் 6 அன்று அதிகாலையில், மியான்மர் எல்லையில் உள்ள பெஹியாங் கிராமத்தில் மாருதி ஈகோ வேனில் சென்றுகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரை ரகசியமாக பின்தொடர்ந்து சென்று, சிங்கட் துணைப்பிரிவில் உள்ள தடோ வெங்கில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஹெராயின் அடங்கிய 219 சோப்புப் பெட்டிகள், எட்டு பொட்டலங்கள் மற்றும் ஓபியம் அடங்கிய 18 சிறிய டின் கேன்கள், இரண்டு பாவோஃபெங் வாக்கி-டாக்கிகள் மற்றும் ரூ.7,58,050 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மேலும் இரண்டு நபர்கள் புல்கோட் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், பெஹியாங் கிராமத்தில் அமைந்துள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டை சோதனை செய்ததில், ஓபியம் மற்றும் ரூ.28,05,000 ரொக்கம் அடங்கிய இரண்டு பொட்டலங்கள் மீட்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது கிடைத்த கூடுதல் தகவல்களின் அடிப்படையில், 2025 ஜூன் 7 அன்று பி.பி 46 அருகே உள்ள ஜூகோனுவாம் கிராமத்தில், இரண்டு நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் ஹெராயின் அடங்கிய 440 சோப்புப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட கடத்தல் போதைப்பொருட்கள் மியான்மரில் இருந்து இந்தோ-மியான்மர் எல்லை வழியாக சூரசந்த்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளுக்கு கடத்தப்பட்டதாகக் தெரிகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135121
***
AD/TS/IR/LDN/KR/DL
(Release ID: 2135218)