மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பாரதத்துக்கு அதிகாரம் அளித்தல்: சிஎஸ்சி- சிஎஸ்ஆர் மாநாடு 2025 - தொழில்நுட்பம் சார்ந்த கிராமப்புற மாற்றத்தில் கவனம் செலுத்தியது
Posted On:
03 MAY 2025 11:46AM by PIB Chennai
சிஎஸ்சி எனப்படும் பொது சேவை மையங்களின் சார்பில் நடத்தப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர் - CSR ) மாநாடு 2025, இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சியையும் கிராமப்புறங்களுக்கு அதிகாரமளித்தலையும் நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. சமூக மாற்றத்தின் முக்கிய அம்சமாக தொழில்நுட்பத்தை இது அடையாளம் காட்டியது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) செயலாளர் திரு அதுல் குமார் திவாரியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்வு, பொது சேவை மையங்கள் மூலம் நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியை நிரப்புவதில் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை (CSR) திட்டத்தின் சக்திவாய்ந்த பங்கினை எடுத்துக்காட்டியது.
கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதிகாரமளித்தலுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன், இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதில் பொது சேவை மையங்களின் (CSCs) தொலைநோக்குப் பங்கை திரு அதுல்குமார் திவாரி எடுத்துரைத்தார்.
சிஎஸ்சி அகாடமி, இந்தியன் இஎஸ்ஜி நெட்வொர்க் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, அரசு, பெருநிறுவங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்தது.
பொதுசேவை மைய (சிஎஸ்சி) அகாடமியின் தலைவரும் செயலாளருமான திரு சஞ்சய் குமார் ராகேஷ், தமது முக்கிய உரையில், நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்களின் (சிஎஸ்சி) தாக்கத்தை எடுத்துரைத்தார். சிஎஸ்சி-க்கள் டிஜிட்டல் மையங்களாக மட்டுமல்லாமல், சமூகங்களை மேம்படுத்தும் ஊக்க சக்திகளாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நிபுணர்கள் தலைமையிலான கருப்பொருள் விவாத அமர்வுகள் இடம்பெற்றன. கிராமப்புற மாற்றத்தை ஊக்குவிக்க பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமைத் திட்டங்களை (CSR) பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் மாநாடு நிறைவடைந்தது. அனைவருக்கும் நிலையான, உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்க பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டியது.
****
(Release ID: 2126412)
TS/PLM/RJ
(Release ID: 2126441)
Visitor Counter : 26