மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக கால்நடை தினம் 2025: புதுதில்லியில் நடைபெற்ற தேசியப் பயிலரங்கு இந்தியாவின் கால்நடை வள மையத்தின் பின்னணியில் உள்ள கால்நடை மருத்துவர்களை கௌரவித்தது

Posted On: 26 APR 2025 6:40PM by PIB Chennai

இந்தியாவின் கால்நடைப் பொருளாதாரத்தின் அமைதியான காவலாளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2025 ஆம் ஆண்டு உலக கால்நடை தினத்தை புதுதில்லியில் ஒரு தேசிய பயிலரங்குடன் இன்று கொண்டாடியது.

இந்த நிகழ்வை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் தொடங்கி வைத்து, கால்நடை பராமரிப்பு சமூகத்தை "கிராமப்புற பொருளாதாரம் மற்றும் தேசிய உயிரியல் பாதுகாப்பின் முதுகெலும்பு" என்று பாராட்டினார். இந்தியாவில் 536 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. இது உலகிலேயே மிகப்பெரியது. சுமார்  70% கிராமப்புற குடும்பங்களின் வருமானம், உணவு மற்றும் பாதுகாப்பிற்கு கால்நடைகளை நம்பியுள்ளன. இருப்பினும், அந்த கால்நடைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்பவர்கள் அரிதாகவே தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

 "ஆரோக்கியமான கால்நடைகள் இல்லாமல் ஆரோக்கியமான இந்தியா இல்லை" என்று மத்திய இணையமைச்சர் தனது உரையில் கூறினார். அதே நேரத்தில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பை நவீனமாக்குதல், திறன் மேம்பாட்டை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் கால்நடை சுகாதார அமைப்புகளை எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்கால்நடை, மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய  கால்நடை மருத்துவர்கள், துணை கால்நடை ஊழியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களிடையே ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் முக்கிய முயற்சியாக உள்ள தேசிய கால்நடைநோய் கட்டுப்பாட்டு திட்டம் போன்றவற்றை பேராசிரியர் பாகேல் எடுத்துரைத்தார். இது 2030-ம் ஆண்டுக்குள் கால் மற்றும் வாய் நோயை  ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் இதுவரை 114.56 கோடிக்கும் அதிகமான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிகளும் 4.57 கோடி ப்ருசெல்லோசிஸ்  தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு உலக கால்நடை தினமான 2025-ன் உலகளாவிய கருப்பொருள் "விலங்கு ஆரோக்கியம் ஒரு குழு செயல்பாடு" என்பதாகும். விலங்கு ஆரோக்கியம் என்பது ஒரு தனிநபர் பணி அல்ல; கால்நடை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு தேசிய முயற்சி என்ற கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கால்நடை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை மட்டுமல்ல, நாட்டின் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்கின்ற ஒன்றையொன்று சார்ந்திருக்கின்ற  வலையமைப்பை உருவாக்குகிறார்கள் என்பதை அங்கீகரித்து, விலங்கு ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பின் சக்தியை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்த நிகழ்வில் 250க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் இந்தியா முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது, கால்நடை நிபுணர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட 3,000-க்கும் அதிகமானோர் மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124587

 

******

SMB/SG

 


(Release ID: 2124617) Visitor Counter : 40
Read this release in: English , Urdu , Marathi , Hindi