சுற்றுலா அமைச்சகம்
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே சுற்றுலா ஒத்துழைப்புக்கான 4-வது கூட்டு பணிக்குழுக் கூட்டம்
Posted On:
10 APR 2025 10:29AM by PIB Chennai
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான சுற்றுலா ஒத்துழைப்பு குறித்த 4- வது கூட்டு பணிக்குழு கூட்டம் ஏப்ரல் 8 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திருமதி முக்தா சின்ஹா, ஜப்பான் சுற்றுலா முகமையின் ஆணையர் திரு ஹரைகாவா நவோயா ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். விமான நிறுவனங்கள், சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டு சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட இரு நாடுகளிலிருந்தும் அதிகாரிகள் மற்றும் தனியார் பங்குதாரர்கள் இதில் பங்கேற்றனர். ஜப்பான் தரப்பில் ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு , ஜப்பான் பயண முகவர்கள் சங்கம், ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை பங்கேற்ற முக்கிய அமைப்புகளாகும். இந்தியக் குழுவில் வெளியுறவு, விமானப் போக்குவரத்து, கல்வி, என்சிஎச்எம்சிடி, ஐசிசிஆர் மற்றும் இந்திய சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் , இந்திய வெளிச்செல்லும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் , புத்த மத சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் போன்ற தனியார் பங்குதாரர்கள் இருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதிலும்கூட்டம் கவனம் செலுத்தியது. சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், ஜப்பான் குழுவினரை வரவேற்று இரவு விருந்தளித்தார்.
புத்தமதத் தலங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் குறித்த குறிப்புகளை இரு நாடுகளின் இணைத் தலைமை வகித்தவர்கள் பரிமாறிக் கொண்டனர். இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஓனோ கெய்ச்சி பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கலாச்சார உறவுகள் மற்றும் செறிவூட்டப்பட்ட சுற்றுலாவின் பரஸ்பர நன்மைகள் குறித்து வலியுறுத்தினார்.
ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவில் உள்ள பௌத்த தலங்களை ஊக்குவித்தல், விமான இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஜப்பானிய மாணவர்களின் வருகையை ஊக்குவித்தல் போன்ற முயற்சிகளுடன் இருதரப்பு சுற்றுலாவை விரிவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் செல்வாக்குடன் இருப்பவர்களை பயன்படுத்துதல், தனியார் துறையின் ஈடுபாடு மற்றும் உத்திகள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இரு தரப்பிலும் இருந்த பிரதிநிதிகள் மதிப்புமிக்க உள்ளீடுகளை பகிர்ந்து கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த கூட்டத்தின் போது இரு தரப்பினரும் வெளிப்படுத்திய ஒத்துழைப்பு உணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் துடிப்பான சுற்றுலா சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய பேச்சுவார்த்தைக்கான பரஸ்பர உத்தரவாதங்கள், மேலும் ஒத்துழைப்புகள் மற்றும் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர செழிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பாலமாக சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வலுவூட்டப்பட்ட உறுதிப்பாடு ஆகியவற்றுடன் கூட்டம் சாதகமான அம்சங்களுடன் நிறைவடைந்தது. 2025 செப்டம்பர் 22 முதல் 28 வரை ஒசாகாவில் நடைபெறும் உலக எக்ஸ்போ 2025 இல் பங்கேற்பதற்கான தனது திட்டங்கள் குறித்தும் ஜப்பான் தூதுக்குழுவிடம் இந்தியா தெரிவித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120654
***
SV/PKV/RJ
(Release ID: 2120695)
Visitor Counter : 47