ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளி ஏற்றுமதி மேம்பாடு
Posted On:
21 MAR 2025 12:15PM by PIB Chennai
உலக அளவில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 4% பங்களிப்புடன் உலகின் முன்னணி ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி, ஆயத்தஆடைகளின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரித்துள்ளது. நாட்டின் முக்கிய ஜவுளி, ஆயத்த ஆடைகள் ஆகியவை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2023-24-ம் நிதியாண்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 53 சதவீதமாக உள்ளது.
நாட்டில் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நவீன, ஒருங்கிணைந்த, உலகத் தரம் வாய்ந்த ஜவுளி உள்கட்டமைப்பை உருவாக்க பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். இதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சர்வதேச அளவிலான போட்டித்தன்மையை உருவாக்குவதற்கும், செயற்கை இழையிலான ஆடைகளை உற்பத்தி செய்வதற்கும் ஜவுளித்துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் உதவிடும் வகையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
பருத்தி, பட்டு, கம்பளி, சணல் மற்றும் செயற்கை இழை உள்ளிட்ட மூலப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யவும் ஜவுளி உற்பத்தியில் மதிப்புக் கூட்டல் சங்கிலித் தொடரை மேம்படுத்த உதவிடும் வகையில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் பருத்தி சீராக கிடைப்பதை உறுதி செய்யவும், பருத்தி சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வத்தை அதிகரிக்கவும் மத்திய அரசானது ஆண்டுதோறும் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து வருகிறது. இதன் மூலம் சந்தையில் பருத்தியின் விலை குறைவாக இருக்கும் சமயத்தில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை பெறுவதற்கு வகைசெய்கிறது. மேலும் போட்டி விலையில் பருத்தி கிடைப்பதையும் இது எளிதாக்குகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113532
***
TS/SV/AG/RR
(Release ID: 2113572)
Visitor Counter : 20