உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள்

Posted On: 18 MAR 2025 3:27PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில விஷயங்கள். சைபர் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது மற்றும் சட்ட அமலாக்க முகமைகள்  மூலம் உயர் தொழில்நுட்ப இணையப் பிரிவை அமைப்பது ஆகியவை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதன்மையான பொறுப்பாகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி அளிப்பதன் மூலம் அவற்றின்சட்ட அமலாக்க முகமைகளின் திறனை மேம்படுத்துகிறது.

சைபர் குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கான நடைமுறையை வலுப்படுத்த, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும்:

*நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை' (ஐ4சி) உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

*பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான சைபர் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக, ஐ4சி திட்டத்தின் ஒரு பகுதியாக, 'தேசிய சைபர் குற்ற புகார் இணையதளம்' (https://cybercrime.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் புகாரளிக்கப்பட்ட சைபர் குற்ற சம்பவங்கள், அவற்றை எஃப்.ஐ.ஆர்களாக மாற்றுதல் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் சட்டத்தின் விதிகளின்படி சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேச சட்ட அமலாக்க முகமைகளால் கையாளப்படுகின்றன.

*நிதி மோசடிகளை உடனடியாகப் புகாரளிப்பதற்கும், மோசடி செய்பவர்கள் நிதி மோசடி செய்வதைத் தடுப்பதற்கும் ஐ4சி-இன் கீழ் 'குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு' 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதுவரை, 13.36 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களில் ரூ.4,386 கோடிக்கும் அதிகமான நிதி சேமிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் புகார் அளிக்க உதவி பெறும் வகையில், கட்டணமில்லா உதவி எண் '1930' செயல்படுத்தப்பட்டு வருகிறது.

*மாநில/யூனியன் பிரதேச காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஆரம்ப கட்ட இணைய தடயவியல் உதவியை வழங்குவதற்காக ஐ4சி-இன் ஒரு பகுதியாக 'தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம் (புலனாய்வு)' புதுதில்லியில் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை, தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம் (புலனாய்வு) சைபர் குற்றங்கள் தொடர்பான சுமார் 11,835 வழக்குகளில் மாநில / யூனியன் பிரதேசங்களுக்கு தனது சேவைகளை வழங்கியுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112244 

***

RB/DL


(Release ID: 2112588) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi