சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 2025- நிறைவு விழா
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2025 7:47PM by PIB Chennai
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 2025 நிறைவு விழா தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது. வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் பிரிவின் உறுப்பினர் முனைவர். வி.கே.கார்த்திகா பெண்மையை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நம்பிக்கை, சமத்துவம் மற்றும் நட்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார்.
இலக்குகளை நோக்கிய பயணத்தில் அச்சமின்மையை பெண்கள் வளர்த்துக் கொள்வதின் முக்கியத்துவம் குறித்து முதன்மை விருந்தினாராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி காவல் ஆணையர் திருமதி என்.காமினி வலியுறுத்தினார்.
பஞ்சாயத்துகளில் கிராமப்புற பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது மற்றும் இட ஒதுக்கீடுகளால் குறிப்பிடத்தக்க அளவில் தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார். வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் குறித்தும், சட்டத்தின் மூலம் இந்த பிரச்சனைகளை கையாளுவது பற்றியும் அவர் விளக்கமளித்தார். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் உதவி செயலியை அவர் அறிமுகப்படுத்திவைத்தார்.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவின் தலைவர், பேராசிரியர் சி.வேல்மதி பங்கேற்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிறைவு விழாவில், என்ஐடி திருச்சிராப்பள்ளி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

***
GK/RJ/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2111432)
வருகையாளர் எண்ணிக்கை : 24