உள்துறை அமைச்சகம்
தடய அறிவியல் ஆய்வகங்கள் விரிவாக்கம்
Posted On:
12 MAR 2025 4:16PM by PIB Chennai
தற்போது, நாட்டில் சண்டிகர், தில்லி, காம்ரூப், கொல்கத்தா, போபால், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஏழு மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. ஜம்முவில் ரூ.99.9 கோடி நிதி ஒதுக்கீட்டில் 8-வது மத்திய தடய அறிவியல் ஆய்வகம் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.860.3 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் நாட்டில் கூடுதலாக ஏழு மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய தேசிய தடய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நிர்பயா நிதியின் கீழ் தடய அறிவியல் குறித்த திறன் மேம்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பின்வருமாறு:
மாநில தடய அறிவியல் ஆய்வகங்களில் மரபணு பகுப்பாய்வு மற்றும் இணைய வழி தடய அறிவியல் திறன்களை வலுப்படுத்துவதற்கான நிர்பயா நிதியுதவி திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ரூ.245.29 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த புலன் விசாரணை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு மரபணு சான்றுகளை சேகரித்தல், சேமித்தல், கையாளுதல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆதாரங்களை சேகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை, 34,626 விசாரணை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம், தேசிய குற்றவியல், தடய அறிவியல் நிறுவனம் (தற்போது தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தில்லி வளாகம்) ஆகியவற்றால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 18,020 பாலியல் வன்கொடுமை ஆதாரங்களை சேகரிக்கும் பெட்டிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
TS/SV/AG/DL
(Release ID: 2111012)
Visitor Counter : 11