நிதி அமைச்சகம்
ஒழுங்குமுறை, முதலீடு, வர்த்தகம் செய்வதில் எளிமை போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கை நிதிச் சேவைகள் த்துறை நடத்தியது
Posted On:
05 MAR 2025 1:43PM by PIB Chennai
நிதிச் சேவைகள் துறை ஏற்பாடு செய்திருந்த ஒழுங்குமுறை, முதலீடு, வர்த்தகம் செய்தலை எளிதாக்குதல் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சர்வதேசப் பொருளாதாரக் கூட்டமைப்பை ஊக்குவிப்பதற்கும், பாரம்பரியமிக்க துறைகளை வலுப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும், நாட்டின் ஏற்றுமதி திறனை கணிசமான அளவில் உயர்த்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் உரிய நேரத்தில் செயல்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று நிதியமைச்சர் கூறினார். முந்தைய ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுவது குறித்த நடைமுறைகளை நிதியைமச்சர் விரிவாக எடுத்துரைத்தார். முத்ரா கடன் திட்டத்தின் கீழ், தருண் பிரிவில் வழங்கப்படும் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நடைமுறைகள் 2024 அக்டோபர் 24-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் மதிப்பீட்டு முறைகள் சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டுள்ளன. 11 பொதுத்துறை வங்கிகள் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும், 7 வங்கிகள் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
இரண்டாவதாக, முந்தைய நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்பில் 21 புதிய சிட்பி வங்கிக் கிளைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான சோதனை முயற்சியையும் செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளகப் பயிற்சி இடங்கள் முதன்மை நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108360
-----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2108578)
Visitor Counter : 31