தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 3 நாள் சர்வதேச பறவைகள் திருவிழா- பிப்ரவரி 16-ல் தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
08 FEB 2025 10:15PM by PIB Chennai
பிரயாக்ராஜில் பிப்ரவரி 16 முதல் 18 வரை சர்வதேச பறவைகள் திருவிழா நடைபெறவுள்ளது. இதன் மூலம் மகா கும்பமேளா- 2025-க்கு வருகை தரும் பக்தர்கள், 200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்ளூர் பறவைகளைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பல்லுயிர் பெருக்கத்தையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இயற்கை ஆர்வலர்கள், பறவையியலாளர்கள், பக்தர்கள் ஆகியோருக்கு அரிய பறவை இனங்களைக் காணவும், அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை இது வழங்கும்.
சர்வதேச பறவைகள் திருவிழா, பறவைகளைப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு போட்டிகள், கல்வி நடவடிக்கைகள் ஆகியவை மூலம் பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். இந்தத் திருவிழாவில் புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், தனித்துவமான வாசகங்கள் எழுதுதல், விவாதங்கள், வினாடி வினா போட்டிகள் ஆகியவையும் நடைபெறும். கூடுதலாக, தேசிய, சர்வதேச பறவையியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பறவைகள் பாதுகாப்பு வல்லுநர்கள் பங்கேற்கும் தொழில்நுட்ப அமர்வுகள், குழு விவாதங்கள் இடம்பெறும். இதில் அவர்கள் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த திருவிழா குறித்த கூடுதல் விவரங்களுக்கு மக்கள் 9319277004 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வனத்துறையின் தகவல் தொழில்நுட்பத் தலைவர் அலோக் குமார் பாண்டே தெரிவித்தார். இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கம் இளைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள், பக்தர்கள் ஆகியோரைப் பறவைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த ஊக்குவிப்பதாகும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை அரசு வழங்கும்.
****
PLM/KV
(रिलीज़ आईडी: 2101105)
आगंतुक पटल : 68