பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் திட்டங்கள்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
08 FEB 2025 5:19PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து குடிநீர் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
அங்குள்ள கத்துவாவின் ஜஸ்ரோட்டா கிராமத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஏழு குடிநீர் விநியோகத் திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். 25.31 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்களால், ஜஸ்ரோட்டா, ராக் ஹோஷியாரி, பட்யாரி, சக்தா சக், பதோலி சார்பாட், மங்க்தியான் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 2584 வீடுகளை உள்ளடக்கிய 15,881 பேர் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கத்துவா மாவட்டத்தில் 1369.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 303 குடிநீர் வழங்கல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து தீர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் 100 நாட்களில் தமது நாடாளுமன்றத் தொகுதியில் செய்யப்பட்ட பணிகளை அமைச்சர் விவரித்தார். தற்போதைய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவை செய்வதில் 'முழு அரசு' அணுகுமுறையுடன் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பதற்கும் சுற்றுலாவின் திறனை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இப்பகுதியில் பசோஹ்லி, மந்தாலியா போன்ற இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
உதம்பூர் மாவட்டத்தின் மன்சர் பகுதி சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
வரும் காலங்களில், கத்துவா மாவட்டம் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான வழிகள் அதிகரிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் ஜல்சக்தி அமைச்சர் திரு ஜாவேத் அகமது ராணா, ஜல்சக்தித் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
PLM/KV
(Release ID: 2101026)
Visitor Counter : 48