சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி பல்கலைக்கழகம் நடத்திய மருத்துவ முகாம்
Posted On:
07 FEB 2025 5:12PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழக சமூக பணித்துறை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் (பிம்ஸ்) இணைந்து பொது மருத்துவ முகாமை வெற்றிகரமாக புதுச்சேரி பல்கலைக்கழக நூலக அலுவலகத்தில் நடத்தின. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 570 பயனாளிகள் பயன்பெற்றனர்.

முகாமின் தொடக்க நிகழ்வில் சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் கே. அன்பு வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, களப்பணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சாஹின் சுல்தானா, பல்கலைக்கழகம் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் சேவையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
இதில் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தரணிக்கரசு பிம்ஸ் மருத்துவமனை வழங்கிய சேவைகளுக்கு நன்றியை தெரிவித்தார்.
பிம்ஸ் மருத்துவமனை இயக்குநரும் முதல்வருமான மருத்துவர் ரேணு ஜி பாய் வர்கீஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றும் இந்த முயற்சியை வரவேற்று தனது நன்றியை தெரிவித்தார். தொடர்ந்து, சமூக அறிவியல் புலம் முதல்வர் பேராசிரியர் ஜி. சந்திரிகா, பிம்ஸ் மருத்துவமனை இந்த முகாமை நடத்த முன்வந்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் இது எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் சமூக நலத்திற்கும் பேராபரப்பான பலன்களை அளிக்கும் எனவும் கூறினார். மேலும், பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன், பிம்ஸ் சுகாதார அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்வேதா ஊமன், பிம்ஸ் பிசியோதெரபி பள்ளி முதல்வர் டாக்டர் ஐ. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, இந்த முகாமை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
முகாமில் பொது மருத்துவம், எலும்பியல், காது, மூக்கு, தொண்டை, பொது அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்கினர். நோயாளிகள் இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, சோனோ மேமோகிராம், பாப்ஸ்மியர் பரிசோதனை உள்ளிட்ட இலவச சேவைகளைப் பெற்றனர். மேலும், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் முகாமில் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த முகாமின் சிறப்பம்சமாக, பிம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இதில், பிசியோதெரபி சேவைகள், வயிறு மற்றும் இடுப்பு யுஎஸ்சி ஸ்கேன், கண்புரை அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் குறைந்த செலவில் வழங்கப்பட்டன.
***
PKV/RJ/RR
(Release ID: 2100691)
Visitor Counter : 41