பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய 3 போர்க் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் வலிமை அதிகரித்து வருவதற்கு இது ஒரு சான்றாகும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
15 JAN 2025 1:58PM by PIB Chennai
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று விமானம் தாங்கி போர்க் கப்பல்களை 2025 ஜனவரி 15-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டுமான தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக அனுசரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்தினார். இந்த தருணத்தில் துணிச்சலான அனைத்து வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று தெரிவித்தார். இது இந்தியக் கப்பல் படையின் வலிமையைக் காட்டுவதோடு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் வலிமை அதிகரிப்பதற்கும் சான்றாகிறது என்று கூறினார். புவிசார் மற்றும் பொருளாதார கண்ணோட்டத்தில் இந்தியப் பெருங்கடல் எல்லையின் முக்கியத்துவத்தையும், வேகமாக மாறிவரும் இன்றைய சூழலில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடைபெறுகிறது. புவிசார் காரணங்களால், இந்தப் பிராந்தியம் சர்வதேச அதிகாரப் போட்டியின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக மீன்பிடித்தல், ஆட்கடத்தல், பயங்கரவாதம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. எனவே இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் நாட்டின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் 95% வர்த்தகம், இந்தியப் பெருங்கடல் பகுதியுடன் இணைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு வலுவான கடற்படை இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்று மூன்று நவீன போர்க்கப்பல்கள் பயன்பாட்டிற்கு வருவது என்பது நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது.
நாட்டின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதும், பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு உயர் முன்னுரிமை வழங்கி வருகிறது என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பிரிவில் பிரதமரின் தாரக மந்திரமான 'தற்சார்பு இந்தியா இயக்கத்தை' செயல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அமைச்சகம் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறினார். ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி ஆகிய போர்க்கப்பல்களின் வடிவமைப்பில் 75% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
------
TS/SV/KPG/KV/DL
(Release ID: 2093123)
Visitor Counter : 13