சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமூக-பொருளாதார கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு சென்னையில் டிசம்பர் 26, 27 தேதிகளில் மண்டலப் பயிற்சி முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2024 6:45PM by PIB Chennai

தேசிய புள்ளியியல் அலுவலகம், தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 80-வது சுற்றில்  சமூக-பொருளாதார கணக்கெடுப்பை 01.01.2025 முதல் தொடங்கவுள்ளது. இந்த சுற்றில்

தேசிய புள்ளியியல் அலுவலகம், மாநில பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகங்கள் ஆகியவை ஓராண்டு காலத்திற்கு சுகாதாரம் குறித்த கணக்கெடுப்பைக் கூட்டாக மேற்கொள்ளும். 2025 ஜனவரி முதல் மார்ச் வரை தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்படும். கணக்கெடுப்பு காலத்தில் கள நடவடிக்கை பிரிவின் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வருகை தந்து, தேவையான தகவல்களை நேரடியாக டேப்லெட் கணினிகளில் பதிவு செய்வார்கள்.

சுகாதாரம் குறித்த கணக்கெடுப்பானது இத்துறை பற்றிய அடிப்படைத் தரவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதன்மையாக, நோய் பாதிப்பு விகிதம், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதம், பொது மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களின் பயன்பாடு, மருத்துவமனையில் மகப்பேறு விகிதம் போன்றவற்றின் குறியீடுகளை இந்த ஆய்வுப் புள்ளி விவரங்களிலிருந்து பெறுவதற்கு முயற்சி செய்யப்படும். குறிப்பாக 'சிகிச்சைக்கு சொந்த பணத்தைச்  செலவு செய்தல்' மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விவரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பிராந்திய பயிற்சி முகாம்

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தமிழ்நாடு (வடக்கு) சென்னை மண்டல அலுவலகம், 2024 டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்  80 வது சுற்று சமூக-பொருளாதார கணக்கெடுப்புக்கான மண்டல பயிற்சி முகாமை  நடத்துவுள்ளது. கோட்பாடுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் களப்பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை இம்முகாம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் கணக்கெடுப்புகளின் போது பொது மக்களிடமிருந்து தரமான புள்ளி விவரங்களை சேகரிக்க வழிவகை செய்வதுடன், வரவிருக்கும் கணக்கெடுப்புகளின் பல்வேறு விவரங்களை விவாதிக்கவும் ஒரு மேடையாக அமையும்.இந்தப் பயிற்சி முகாமில் சுமார் 100 பிரதிநிதிகள் / அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மாதிரி ஆய்வுகளுக்கு பொருத்தமான, மதிப்புமிக்க, உண்மையான தகவல்களை வழங்கி  கள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

***

 

SMB/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2087669) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English