இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
ஊரக தொழில்நுட்ப செயற்குழு 2.0(ரூட்டாக்) திட்டங்களின் முதல் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது
Posted On:
06 DEC 2024 4:07PM by PIB Chennai
கிராமப்புற தொழில்நுட்ப செயல் குழுவான ரூட்டாக் (RuTAG) 2.0 திட்டங்களின் முதல் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் 2024 டிசம்பர் 5, 6 தேதிகளில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமை வகித்தார்.
பேராசிரியர் சூட் பல்கலைக்கழக வளாகத்தில் IoT-இயக்கப்படும் உரப்பாசன முறைக்கு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டியதுடன், நிகழ்வு தொடங்கியது. நீர் மற்றும் உர பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்தப் புதுமையான செயல்முறை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரூட்டாக் மையங்களால் உருவாக்கப்பட்ட கிராமப்புற மையங்களில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பேராசிரியர் சூட் அதிகாரப்பூர்வ ரூட்டாக் சின்னத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். பேராசிரியர் சூட் தமது உரையில், கிராமப்புற வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் திறனை விரிவாக எடுத்துரைத்தார். நிலையான, உயர்தரமான புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை ரூட்டாக் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ரூட்டாக் 2.0-க்கான எதிர்கால செயல்திட்டம் குறித்த கலந்துரையாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது. விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், ரூட்டாக் மையங்களின் பிரதிநிதிகள் உட்பட 61 பேர் இதில் பங்கேற்றனர்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2081727)