சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலவச சட்ட உதவியை சுமார் ஒரு கோடி மக்கள் பெற்றுள்ளனர்

Posted On: 06 DEC 2024 3:40PM by PIB Chennai

இலவச சட்ட உதவிகளை அதிகரிக்க சட்டம், நீதி அமைச்சகத்தின் நீதித்துறையானது (DoJ) பல்வேறு முன்முயற்சிகள் / திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 39ஏ-ன் கீழ் வரையறுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்களுக்கு கிடைக்கும் இலவச சட்ட உதவியை அதிகரிப்பதற்கும், நீதிக்கான அணுகலை உறுதி செய்வதற்கும் பல திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது.

2021-ம் ஆண்டில், "இந்தியாவில் நீதிக்கான முழுமையான அணுகலுக்கான புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்" (DISHA-திஷா) என்ற பெயரில் ஒரு விரிவான, திட்டம் ஐந்து ஆண்டு காலத்திற்கு (2021- 2026) மொத்தம் ரூ. 250 கோடி செலவில் தொடங்கப்பட்டது.  மக்களை மையமாகக் கொண்ட சட்ட சேவைகளை வழங்குவதை திஷா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2024 நவம்பர்30 வரை, 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 785 மாவட்டங்களில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் தொலை சட்டச் சேவை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. 1,03,06,149 பயனாளிகளுக்கு வழக்குகளுக்கு முந்தைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார அல்லது இதர இயலாமைகள் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவசமாகவும், தேவையான  சட்டப் பணிகளை வழங்குவதற்காகவும், 1987-ஆம் ஆண்டு சட்டப் பணிகள் ஆணையச் சட்டத்தின் கீழ் தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

 

TS/PLM/AG/KR/DL


(Release ID: 2081588) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi