அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அணுமின் நிலையப் பாதுகாப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 05 DEC 2024 5:35PM by PIB Chennai

கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சர்வதேச மேற்பார்வையுடன் இந்தியாவின் அணுமின் நிலையங்கள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  மாநிலங்களவையில் இன்று உறுதியளித்தார். கேள்வி நேரத்தின் போது அணுசக்தி பாதுகாப்பு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். இந்தியாவின் அணுசக்தி திட்டம் பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்றும் அவர் தேசத்திற்கு உறுதியளித்தார்.

இந்திய அணுசக்திக் கொள்கையின் அடிக்கல்லே பாதுகாப்புதான் என்று அறிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங்,  "அணுசக்தித் துறையில், 'முதலில் பாதுகாப்பு, அடுத்து உற்பத்தி' என்ற விதியை நாங்கள் பின்பற்றுகிறோம். இடத் தேர்வு முதல் செயல்பாட்டு சோதனைகள் வரை ஒவ்வொரு கட்டமும் கடுமையான நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது "என்றார். கட்டுமானத்தின் போது காலாண்டு மதிப்பாய்வுகள், ஒரு ஆலை செயல்படத் தொடங்கிய பின்னர் அரை ஆண்டு ஆய்வுகள், ஐந்தாண்டு காலத்தில் கட்டாய  உரிமம் புதுப்பித்தல் செயல்முறை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான ஆய்வு விதிமுறைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

உலக அணுசக்தி இயக்குபவர்கள் சங்கம் மற்றும் பிற உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது இந்தியாவின் நிலையங்களை ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்புத் தரங்களை வலுப்படுத்துகின்றன.

கதிர்வீச்சு உமிழ்வைக் குறைப்பதில் ஆதார அடிப்படையிலான சாதனைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார், இது அணுசக்தித் துறையின் துல்லியமான முயற்சிகளுக்கு ஒரு சான்று என்று அவர் கூறினார். "உலக அளவில், அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு உமிழ்வுக்கான முக்கியமான பாதுகாப்பு அளவுகோல் 1,000 மைக்ரோ சீவெர்ட்கள் ஆகும். இந்தியாவில், நமது ஆலைகள் தொடர்ந்து இந்த வரம்புக்கு கீழேதான் செயல்படுகின்றன, "என்று அவர் தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்   முன்பு 0.081 மைக்ரோசீவெர்ட்டுகளாக இருந்த உமிழ்வின் அளவு இன்று வெறும் 0.002 மைக்ரோசீவெர்ட்டுகளாக குறைந்துள்ளது. இதேபோல், கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும்  2014-ல் 23.140 மைக்ரோசீவெர்ட்டுகள் என்பதிலிருந்து 2023-ல் 15.961 மைக்ரோசீவெர்ட்டுகளாக உமிழ்வு குறைந்துள்ளது.

இந்தியாவின் அணு உலைகள் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரையில் உள்ள அணுமின் நிலையங்கள் இந்தோனேசியாவின் சுனாமி பாதிப்பு மண்டலங்களிலிருந்து 1,300 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளன என்றும், தாராப்பூர் போன்ற மேற்கு கடற்கரையில் உள்ள அணுமின் நிலையங்கள் சுனாமி அபாய மண்டலத்திலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மேலும், பல  பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்த கூடங்குளம் அணுமின் நிலையம்  தற்போதைய அரசு நிர்வாகத்தின் கீழ் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு காலத்தில் அணுசக்தியில் ஒரு சிறிய பங்கு வகிக்கும் நாடாக கருதப்பட்ட இந்தியா, இப்போது உலகத் தலைவராக உருவெடுத்துள்ளது என்று கூறி டாக்டர் ஜிதேந்திர சிங் தனது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081169

 *****

TS/SMB/KPG/DL


(Release ID: 2081295) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi , Marathi