வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளவிலான வர்த்தக போட்டித்தன்மையில் இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட பங்களிப்பு

Posted On: 03 DEC 2024 11:06AM by PIB Chennai

உலகின் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்துள்ள இந்தியாவின் பயணம் ஏற்றுமதியில் உள்ள பாராட்டத்தக்க  சாதனைகளின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. கச்சா எண்ணெய், இரசாயன உரங்கள், குறைமின்கடத்திகள், விலைமதிப்பற்ற கற்கள் வரை பல்வேறு துறைகளில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நிரூபித்துள்ளது. இந்த வளர்ச்சி மேம்பட்ட தொழில்நுட்பம், புதுமையான நடைமுறைகள் மற்றும் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போட்டிபோடும் அளவிலான உற்பத்தி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் திறனை பிரதிபலிக்கிறது. வலுவான அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் காரணமாக, நாடு தனது ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதுடன், உலகளவில் நம்பகமான நாடாக அதன் நிலையையும் வலுப்படுத்துகிறது. பல்வேறு முக்கிய பொருட்களின் உற்பத்தியில் இணக்கமான நடைமுறைகளுக்கான நான்கு இலக்க குறியீடு நிலைகளில் இந்தியாவின் ஏற்றுமதி செயல்திறன் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளது. விநியோக நடைமுறைகளுக்கான தரநிலையில் உலகளவில் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2023-ம் ஆண்டில் 1 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக இருந்தது.

பல்வேறு முக்கிய ஏற்றுமதி பிரிவுகளில் இந்தியாவின் வலுவான செயல்திறன் குறித்த விரிவான ஆய்வு முடிவுகள், உலகளாவிய வர்த்தகத்தில் அதன் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் இந்தியா ஒரு முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. பெட்ரோலியத் துறை (பிட்டுமினஸ் கனிமங்களிலிருந்து பெறப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எண்ணெய்கள்) வியத்தகு உயர்வைக் கண்டுள்ளது. இந்த பொருட்களைப் பொறுத்து நாட்டின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2014 - ம் ஆண்டில் $60.84 பில்லியன் டாலரிலிருந்து 2023 - ம் ஆண்டில் $84.96 பில்லியன் டாலர்களாக அதிகரித்து, உலகளவில் ஏற்றுமதி சந்தைப் பங்களிப்பாக 12.59%- த்தைக் கைப்பற்றியுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது ஏற்றுமதியில் இந்தியாவை உலகின் இரண்டாவது நாடாக உயர்த்தியுள்ளது. இது சுத்திகரிப்புப் பணிகளுக்கான மேம்பட்ட  உள்கட்டமைப்பு வசதிகள், அதிகரித்து வரும் உற்பத்தி திறன் மற்றும் சர்வதேச தரங்களை கடைப்பிடிப்பது ஆகியவற்றால் சாத்தியமாகிறது. இது உலகளவில் நம்பகமான எரிசக்தி விநியோகம் செய்யும் நாடாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது.

வேளாண் வேதியியல் துறையில், குறிப்பாக பூச்சிக்கொல்லிகள், எலி மற்றும் பூஞ்சைக் கொல்லிகள் போன்றவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது, . 2023 - ம் ஆண்டில், நாட்டின் ஏற்றுமதி $4.32 பில்லியனை எட்டியது. இது 10.85% உலகளாவிய சந்தைப் பங்கைக் குறிக்கிறது, இது 2014 ம் ஆண்டில் 5.89% ஆக இருந்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் செய்யப்படும் முதலீடுகள், சர்வதேச வேளாண் தரங்களுக்கு இணங்குவதுடன், உலகளவில் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளன. இந்த வளர்ச்சி நிலையான விவசாயத்தை ஆதரிப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.

 

நாட்டின் சர்க்கரை ஏற்றுமதியும் விதிவிலக்கான வளர்ச்சியைக் கண்டுள்ளது, கரும்பு அல்லது பீட் சர்க்கரைக்கான உலகளாவிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2014 ம் ஆண்டில் 4.31% ஆக இருந்து 2023 ம் ஆண்டில் 12.21% ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்புகள் 2023 ம் ஆண்டில் $3.72 பில்லியனை எட்டியது, இது இந்தியாவின் நிலையை இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக உறுதிப்படுத்தியது. வலுவான உற்பத்தித் தளங்கள் மற்றும் சாதகமான விவசாயக் கொள்கைகள் ஆகியவை வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு உதவியுள்ளன. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், அதன் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன.

மின்னணு உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இது மின்மாற்றிகள் மற்றும் அது சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் பிரதிபலிக்கிறது, இது 2014 ம் ஆண்டில் $1.08 பில்லியனில் இருந்து 2023 ம் ஆண்டில் $2.85 பில்லியனாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2023 ம் ஆண்டில் 2.11% ஆக அதிகரித்து 10வதுஇடத்தில் உள்ளது. இது 2014 ம் ஆண்டில் 17 வது இடத்தில் இருந்தது. "இந்தியாவில் தயாரியுங்கள்" போன்ற மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் திட்டங்கள் இந்த முன்னேற்றத்தை ஊக்குவித்து, வலுவான உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளன.

ரப்பர் நியூமேடிக் டயர் ஏற்றுமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது, இது 2023 ம் ஆண்டில் 2.66 பில்லியன் டாலரை எட்டியது. உலகளாவிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு   3.31% ஆக உயர்ந்து, 8 வது இடத்தைப் பிடித்தது. இது 2014 ம் ஆண்டில் 14 வது இடத்தில் இருந்தது.  இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி, தரம், செலவு போட்டித்தன்மை மற்றும் பல்வேறு சந்தைகளுக்கு, குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதார ற்நாடுகளில், சேவை செய்யும் திறன் ஆகியவற்றின் மீதான இந்தியாவின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இதேபோல், குழாய்கள், வால்வுகள் மற்றும் ஒத்த தொழில்துறை தயாரிப்புகளின் ஏற்றுமதி 2023-ம் ஆண்டில் $2.12 பில்லியனை எட்டியது, இது 2.16% உலகளாவிய சந்தைப் பங்கைக் கைப்பற்றி உலகளவில் 10வதுஇடத்தைப் பிடித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079986

***

TS/SV/KR


(Release ID: 2080043) Visitor Counter : 19


Read this release in: English , Hindi , Manipuri