தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 5

நாடக மேடையில் இருந்து திரைப்படம் வரை: "புனே ஹைவே" திரைப்படம் காலத்தால் அழியாத கதைசொல்லலை உயிர்ப்பிக்கிறது

 

 கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'புனே ஹைவே' படத்தின் நடிகர்கள், படக் குழுவினர் இன்று (23.11.2024) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தத் திரைப்படக் குழுவினர், தங்கள் படைப்பு செயல்முறைகள், தயாரிப்பின் போது எதிர்கொண்ட சவால்கள், சினிமாவின் எதிர்காலம் போன்றவை குறித்த அவர்களின் பார்வை குறித்து பேசினர்.

ராகுல் தகுன்ஹா, பக்ஸ் பார்கவா ஆகியோரால் இயக்கப்பட்ட 'புனே ஹைவே' திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான த்ரில்லர் ஆகும். இது எதிர்பாராத சூழ்நிலைகளில் சோதனை வரும்போது நட்பின் பலவீனத்தை ஆராயும் ஒரு கதையை வெளிப்படுத்துகிறது. ஏக்கம், சஸ்பென்ஸ், இதயத்தைத் துளைக்கும் சம்பவங்கள் ஆகியவற்றின் சிறந்த கலவையுடன், இந்த படம் ஆழமான மனித உறவுப் பிணைப்புகளையும் அவற்றின் சிக்கல்களின் சாரத்தையும் எடுத்துரைக்கிறது.

முதலில் ஒன்பது நாடுகளில் மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்ட புனே ஹைவே, திரைப்பட வடிவத்திற்கு ஏற்றவாறு ஒரு படைப்புப் பரிணாம வளர்ச்சியை அடைந்தது. நாடகம், திரைப்படம் இரண்டையும் எழுதி இயக்கிய ராகுல் தகுன்ஹா, பெரிய திரைக்கு ஏற்ப அதை விரிவுபடுத்துவது குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

"சினிமாவுக்காக நாடகத்தின் தன்மையை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. அதே நேரத்தில் அதன் முக்கிய உணர்ச்சிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது" என்று தகுன்ஹா விளக்கினார்.

இணை இயக்குநர் பக்ஸ் பார்கவா படத்தின் தயாரிப்பில் கூட்டு முயற்சியை எடுத்துரைத்தார். "இந்த படம் உழைப்பு, பல வருட கதை சொல்லும் அனுபவம், உலக அளவில் எதிரொலிக்கும் படைப்புத் தன்மை ஆகியவற்றை இணைக்கிறது" என்று அவர் கூறினார்.

இதுபோன்ற ஒரு தனித்துவமான படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அமித் சாத் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். "இந்த பாத்திரத்தில் நடித்தது எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான அனுபவங்களில் ஒன்றாகும்." என்று அவர் கூறினார்.

படத்தின் உலகளாவிய கருப்பொருள்கள் குறித்த தனது எண்ணங்களை மஞ்சரி ஃபட்னிஸ் பகிர்ந்து கொண்டார். "புனே ஹைவே ஒரு த்ரில்லர் மட்டுமல்ல. இது வாழ்க்கையை மாற்றும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது நாம் எடுக்கும் முடிவுகள் பற்றிய ஒரு கசப்பான ஆய்வு" என்று அவர் கூறினார். "இது அனைவரையும் எதிரொலிக்கும் ஒரு படம்." என்று தயாரிப்பாளர் சீமா மகாபத்ரா கூறினார்.

புனே ஹைவே, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

*****

PLM/KV

 

 

 

iffi reel

(Release ID: 2076418) Visitor Counter : 14