சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வேவ்ஸ் சவாலில் பங்கேற்குமாறு மாணவர்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வலியுறுத்தல்
Posted On:
22 NOV 2024 3:54PM by PIB Chennai
உலக ஒலி-ஒளி & பொழுது போக்கு மாநாடான வேவ்ஸ் (WAVES) -ன் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தொடங்கிய “இந்தியாவில் உருவாக்குங்கள்” சவாலில் தீவிரமாக பங்கேற்க வேண்டுமென்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திரு கே.கைலாஷ் நாதன் கேட்டுக் கொண்டுள்ளார். ‘ஞான கும்பமேளா’ தேசிய அகாடமி மாநாடு தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் புத்தாக்கமும், படைப்பாற்றலும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து, சிக்ஷா சம்ஸ்கிருதி உத்தன் நியாஸ் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் தேசிய கல்வி மாநாடான 'ஞான கும்பமேளா' நேற்று (21.11.24) புதுச்சேரியில் தொடங்கியது. வேவ்ஸ் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் வகையில் கண்காட்சி வளாகத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அரங்கு ஒன்றை அமைத்துள்ளது.
துணை நிலை ஆளுநர் தமது தொடக்க உரையில், நவீன அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, வேலைவாய்ப்பு, நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்காக இந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய மொழிகளில் நவீன தொழில்நுட்பங்களுக்கான உள்ளீடுகளை உருவாக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். சமூகம், பொருளாதாரம் மற்றும் புவியியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் கல்வி மாற்றம் அளிக்கும் காரணியாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்திய அவர், காலனித்துவ சகாப்தத்தின் கல்வி முறையிலிருந்து மாறி முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதாக கல்வி முறை இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளிடையே அமைதியான இருப்பை ஊக்குவித்தல், மதிப்பு அடிப்படையிலான குடும்ப வாழ்க்கையை ஊக்குவித்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை பின்பற்றுதல், நீடித்த உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளை உறுதி செய்தல், பொறுப்புள்ள குடிமக்கள் உணர்வை உருவாக்குதல் ஆகியவை நாட்டின் நலனுக்கு உகந்த அம்சங்கள் என துணை நிலை ஆளுநர் கூறினார். புதிய கல்வியின் எதிர்கால முன்மாதிரியாகவும், இந்திய மொழிகளில் ஒற்றுமைக்கான மையமாகவும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் முன்னோடியாகவும் புதுச்சேரி திகழும் என்று திரு கைலாஷ் நாதன் குறிப்பிட்டார்.
சீனிவாச ராமானுஜன், சி.வி.ராமன். ஏபிஜே அப்துல் கலாம் போன்றவர்கள் நவீன அறிவியலின் உலகத் தரம் வாய்ந்த சிற்பிகளாக திகழ்ந்தனர் என்று கூறிய அவர், இன்றைய வெற்றிக்கதைகளுக்கு நெருக்கமாக புதிய தலைமுறையினரைக் கொண்டு வருவது அவசியம் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி கல்வி அமைச்சர் திரு ஏ.நமச்சிவாயம் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர் திரு ஆர்.செல்வம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் டாக்டர் தரணிக்கரசு, ஷிக்ஷா சம்ஸ்கிருதி உத்தன் நியாஸ் தேசிய செயலாளர் டாக்டர் அதுல் கோத்தாரி, மயிலம் பொம்மபுரா ஆதீனம், சிவஞான பாலையா சுவாமிகள், கோவை சிரவை ஆதீனம் கவ்மார மடாலயத்தைச் சேர்ந்த ராமானந்த குமரகுரு சுவாமிகள், ஷிக்ஷா சம்ஸ்கிருதி உத்தன் நியாஸ், தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு அலோக் சக்ரவல், அந்த அமைப்பின் மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திருமதி ஷோபா பைத்தாங்கன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
***
(Release ID: 2076047)
Visitor Counter : 20