புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவி அறிவியல் அமைச்சகம் நடத்திய சிறப்பு பயிற்சியை நிறைவு செய்த பின்னர், கடல் ஆராய்ச்சியில் 6 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஐஎஸ்ஏ பயிற்சியாளர்களை இந்தியா பாராட்டியது

Posted On: 19 NOV 2024 4:48PM by PIB Chennai

நீடித்த பெருங்கடல் வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் நடவடிக்கையாக கடல்சார் ஆராய்ச்சியில் சிறப்பு வர்த்தகத் திட்டத்தை நிறைவு செய்த நைஜீரியா, கென்யா, இலங்கை, தான்சானியா, கானா, ஜமைக்கா ஆகிய  ஆறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பயிற்சியாளர்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.

சர்வதேச கடற்படுகை ஆணையத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, மேம்பட்ட கடற்படுகை ஆய்வு பயிற்சியின் நிறைவைக் கொண்டாடியது. சுற்றுச்சூழல் மேற்பார்வை, சர்வதேச ஒத்துழைப்பு, வளப் பகிர்வு ஆகியவற்றில் இந்தியாவின் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டியது.

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் உதவியுடன் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கானா, கென்யா, நைஜீரியா, ஜமைக்கா, இலங்கை, தான்சானியா  நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.  நீடித்த கடல் ஆய்வு மற்றும் திறன் வளர்ப்புக்கான மையமாக இந்தியாவின் பங்கை இது எடுத்துக்காட்டியது.

இந்திய அரசின் சார்பாக பயிற்சியாளர்களை வரவேற்ற டாக்டர் ஜிதேந்திர சிங் கடுமையான திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக அவர்களைப் பாராட்டினார். பொறுப்பான கடற்படுகை ஆய்வில் இந்தியாவின் தலைமையை வலியுறுத்திய அவர், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட திறமையான நிபுணர்களின் வலைப்பின்னலை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இந்தப் பயிற்சியை குறிப்பிட்டார். "நீங்கள் பயிற்சியாளர்கள் மட்டுமல்ல; ஒரு நிலையான எதிர்காலத்தின் தூதர்கள், "என்று அவர் கூறினார், பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் கடல் பாதுகாப்பை வென்றெடுக்க தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

பொருளாதார வளர்ச்சி, வேலை உருவாக்கம் மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரங்களுக்காககடல்வளப்  பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் "நீலப் பொருளாதாரக்" கொள்கையுடன் இந்த பயிற்சித் திட்டம் நெருக்கமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நீலப் பொருளாதார முன்முயற்சி கடல் வளத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உண்மையான பொருளாதார முன்னேற்றம் என்பது வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையிலிருந்தே வருகிறது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை டாக்டர் ஜிதேந்திர சிங்  வலியுறுத்தினார்.

எதிர்கால சந்ததியினருக்கு நீடித்த கடல்சார் சூழலை உறுதி செய்யும் வகையில், சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் இதர சர்வதேச அமைப்புகளுடன் தனது கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இந்தியாவின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தி டாக்டர் ஜிதேந்திர சிங் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இந்தியாவின் முயற்சிகள், பொறுப்பான கடல் ஆய்வுக்கான இதேபோன்ற கட்டமைப்புகளை பின்பற்ற மற்ற நாடுகளை ஊக்குவிக்கும் என்றும், கடல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக சர்வதேச ஒத்துழைப்புக்கு களம் அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074646   

***

TS/SMB/RS/DL


(Release ID: 2074758) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi