ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கங்கை நதி தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் 58-வது செயற்குழு கூட்டம்: பல்லுயிர் பாதுகாப்பு குறித்த முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted On: 14 NOV 2024 1:18PM by PIB Chennai

கங்கை நதி தூய்மைக்கான தேசிய இயக்கத்தின்  58-வது செயற்குழு கூட்டம் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கங்கை நதி தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு. ராஜீவ் குமார் மிட்டல் தலைமை தாங்கினார். இந்தத் திட்டங்கள் கங்கை நதியையும் அதன் நீர்வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சம்பல், சோன், தாமோதர் மற்றும் டான்ஸ் நதிகளின் சுற்றுச்சூழல் பரவலை  மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய திட்டத்திற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.11 கோடி நிதி ஒதுக்கீட்டில், இந்த ஆறுகளின் சுற்றுச்சூழல் பரவலை மதிப்பீடு செய்வது மட்டுமல்லாமல், நீரோட்ட அமைப்புகளை அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்ய உதவும் நீரியல் மற்றும் நீரியக்கவியல் மாதிரிகளை தயாரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இது தற்போதுள்ள நீரோட்டம் மற்றும் இயற்கையான நீரோட்ட முறைகளை ஆய்வு செய்வதை உள்ளடக்கியதாகும் .இது நீரின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த நதி அமைப்புகளில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தை ஆவணப்படுத்துவதுடன், அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகள் சமநிலையாகவும் வளமாகவும் இருப்பதை உறுதி செய்யும்.

கங்கை நதி டால்பினைப் பாதுகாக்க ஒரு லட்சிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'தத்தளித்துக் கொண்டிருக்கும் கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட மீட்பு அமைப்பு' என்ற தலைப்பிலான இத்திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தில் இருக்கும் டால்பின்களுக்கு உதவுவதற்காக 'டால்பின் ஆம்புலன்ஸ்' என்ற சிறப்பு மீட்பு வாகனத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இந்தத் திட்டம் டால்பின் பாதுகாப்பு மற்றும் பயிற்சி மூலம் சமூகத் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

உத்தரப்பிரதேசத்தில் கங்கைப் படுகையில் அழிந்து வரும் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான புதுமையான மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் அருகி வரும் ஆமை இனங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதுடன், தேசிய சம்பல் சரணாலயத்தில் இடஞ்சார்ந்த கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் கருவியை நிறுவுவதோடு அழிந்து வரும் அச்சுறுத்தல் உள்ள மூன்று இனங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதும் ஆகும். இத்திட்டத்திற்கு ரூ.78.09 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் மேம்பாட்டுத் துறை, வளர்ச்சி மற்றும் பொது விநியோகத் துறையின் இணைச் செயலாளரும் நிதி ஆலோசகருமான திருமதி ரிச்சா மிஸ்ரா, என்எம்சிஜி துணை தலைமை இயக்குநர் திரு நளின் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073248

***

TS/PKV/KV/KR


(Release ID: 2073265) Visitor Counter : 102


Read this release in: English , Manipuri , Urdu , Hindi