இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பகவான் பிர்சா முண்டா 'மண்ணின் மாவீரர்கள்' பாதயாத்திரையை டாக்டர் மன்சுக் மாண்டவியா மேற்கொண்டார்
Posted On:
13 NOV 2024 4:44PM by PIB Chennai
மை பாரத் தளம் தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் பங்களிப்புகளுக்கான ஒரு ஊடகமாகும். சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் இன்று நடைபெற்ற 'பகவான் பிர்சா முண்டா 'மண்ணின் மாவீரர்கள்' பாதயாத்திரையின் போது மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
'பகவான் பிர்சா முண்டா 'மண்ணின் மாவீரர்கள்' பாதயாத்திரை' தொடக்க விழாவின் போது, கிரிக்கெட் வீரர் ஆகான்ஷா ராணி, டேக்வாண்டோ தடகள வீரர் பிரதீக் படா, மலையேறும் வீரர் நைனா தக்காட் உள்ளிட்ட பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
"நவம்பர் 15 அன்று பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 150 கல்லூரிகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மை பாரத் இளைஞர் தன்னார்வலர்களால் இந்தப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு முழுக்க முழுக்க இளைஞர்களால் நடத்தப்படுகிறது" என்று மத்திய அமைச்சர் கூறினார்.
மை பாரத் தளத்தில் 1.5 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பதிவு செய்துள்ளதை குறிப்பிட்ட டாக்டர் மாண்டவியா, மை பாரத் இளைஞர்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், விளையாட்டு, கலை அல்லது கலாச்சாரம் என எதுவாக இருந்தாலும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலம் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்க அனுமதிக்கிறது என்றும் விளக்கினார். வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க தேச நிர்மாண முயற்சிகளில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பகவான் பிர்சா முண்டாவிடமிருந்து உத்வேகம் பெற்ற பிரதமர், தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இளைஞர்கள் இன்றியமையாதவர்கள் என்றார். "சேவை என்பது நமது தேசத்தின் அடிப்படை மதிப்பு" என்று அவர் உறுதிப்படுத்தினார். ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை வளர்ப்பதில் அதன் பங்கை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயுஷ்மான் பயனாளிகளுக்காக, குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களுக்காக சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறும், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உதவுமாறும் மத்திய அமைச்சர் இளைஞர்களை கேட்டுக் கொண்டார்.
சத்தீஸ்கரின் ஜஷ்பூரில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு அத்தியாவசிய பயிற்சி வாய்ப்புகளை வழங்கவும் வடிவமைக்கப்பட்ட அதிநவீன விளையாட்டு அரங்கம் நிறுவப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார், இது 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவை பதக்கங்களை வெல்ல வைக்கும் என்று அவர் கூறினார்.
பாதயாத்திரையின் போது, மத்திய அமைச்சருக்கு பல இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, அங்கு அவருக்கு பல்வேறு பழங்குடி பாரம்பரியங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய பழங்குடி விளையாட்டுகளையும் அவர் பார்வையிட்டார், தனித்துவமான பழங்குடி உணவு வகைகளை அவர் ருசித்தார். பல்வேறு பழங்குடி கலை வடிவங்களைப் பாராட்டிய அவர், பழங்குடி சமூகத்தின் வளமான பாரம்பரியத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.
பகவான் பிர்ஸா முண்டா 'மண்ணின் மாவீரர்கள்' பாதயாத்திரை புராணா நகர் மைதானத்தில் தொடங்கி, ரஞ்சிதா மைதானத்தில் பல்வேறு பாதைகளைக் கடந்து நிறைவடைந்தது. இளம் பங்கேற்பாளர்கள் பாரத மாதா, சத்தீஸ்கர் மகாதாரி, பிர்சா முண்டா பிரபு போன்று வேடமணிந்து வந்தனர்.
***
PKV/RR/KV
(Release ID: 2073050)
Visitor Counter : 23