பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் "கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்பு" திட்டத்தை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று தொடங்கி வைத்தார்
Posted On:
24 OCT 2024 9:40PM by PIB Chennai
கிராம பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்பு திட்டத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோர் இன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இந்திய வானிலை ஆய்வுத் துறை, புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், அடிமட்ட காலநிலை தயாரிப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. குறிப்பிடத்தக்க இந்த முன்முயற்சி அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அடித்தள நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பிற துறைகளுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறது. இந்த முயற்சி கிராம பஞ்சாயத்துகளுக்கு ஐந்து நாள் வானிலை முன்னறிவிப்பையும் ஒவ்வொரு மணிநேர புதுப்பிப்புகளையும் வழங்கும். இது கிராமப்புற சமூகங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடவும், வானிலை தொடர்பான அபாயங்களை எதிர்கொள்ள தயாராவதற்கும் உதவும்.
"கிராம பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்பு" என்பது இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்குமான முக்கிய நவடிக்கையாகும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார். பருவநிலை மாறுதல் சவால்களை எதிர்கொள்ளவும், விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலைக்கான முடிவுகளை எடுக்கவும் பஞ்சாயத்துகளுக்கு உதவுவதன் மூலம் இந்த முன்முயற்சி கிராமப்புற நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். கிராமப்புற மக்களுக்கு சரியான நேரத்தில் வானிலை தகவல்களைத் தெரிவிப்பதிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் முக்கிய பங்களிப்பை திரு சிங் எடுத்துரைத்தார். கிராம பஞ்சாயத்து நிலையில் வானிலை முன்னறிவிப்புகள் கிராமப்புறங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை இடையேயான ஒத்துழைப்பை மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்புகள் கிடைப்பது பேரிடர் தயார்நிலையை கணிசமாக அதிகரிக்கும் என்றும், இந்தியா பருவநிலை தாக்கத்தை எதிர்கொள்ளும் சமூகங்களை உருவாக்குவதில் பங்களிக்கும் என்றும் கூறினார். மோசமான வானிலையின் மோசமான விளைவுகளிலிருந்து கிராமப்புற மக்களைப் பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் இந்த தகவல்களை நன்றாகப் பயன்படுத்துமாறு அவர் கிராம அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார்.
பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இந்த முயற்சியின் நீண்டகால நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.கிராமப்புற மக்களின், குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த முன்முயற்சியின் திறனை அவர் பாராட்டினார், இதன் நன்மைகள் குறித்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற தொலைநோக்கு சிந்தனை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகள் மூலம் வளர்ச்சியடைந்த தேசம் என்ற கனவை நனவாக்குவதில் கிராமப்புற இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று பேராசிரியர் பாகேல் கூறினார்.
இந்த நிகழ்வுடன் "கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்புகள்" குறித்த பயிலரங்கும் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாநில பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள் உட்பட 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
***
(Release ID: 2067958)
TS/SMB/RR/KR
(Release ID: 2068063)
Visitor Counter : 20