கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை கௌரவிப்பதுடன், 22,000 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும்

Posted On: 10 OCT 2024 12:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் முன்முயற்சிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதன் மூலம் அமைச்சரவை மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட  இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை பறைசாற்றுவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

பண்டைய பாரம்பரியத்தை கொண்டுள்ள முக்கிய இடமான லொதல், மாற்றத்திற்கான பாதையில் பணிக்கவுள்ளது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வளாகம் அமைக்கப்பட்ட பின்னர் உலகிலேயே மிகப்பெரிய கடல்சார் வளாகமாக திகழும் இந்த திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். பார்வையாளர்களுக்கு கல்வி மற்றும் அனுபவ தாக்கத்தை இது ஏற்படுத்தும். பண்டைய நினைவுச்சின்னங்கள் முதல் நவீன பொக்கிஷங்கள் வரை ஏராளமான கலைப்பொருட்களை இது காட்சிப்படுத்தும். நமது கடல்சார் வரலாற்றின் தொன்மையை ஆராய பார்வையாளர்களை ஊக்குவிக்கும் கல்வித் தளமாகவும் இது செயல்படும்.

நவீன வசதிகளுடன் அமையவுள்ள இந்த வளாகம் நமது கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால கடல்சார் முயற்சிகளை ஒருங்கிணைப்பதாக அமையும். கல்வி, கேளிக்கை ஆகியவற்றின் தனித்துவமான கலவையாக இது இருக்கும். லோதலின் கட்டிடக்கலை சிறப்புகளை பார்வையாளர்கள் உணரும் வகையில், இது அமையும்.  இந்த வளாகம், ஞானத்தின் அடையாளமாக திகழ்வதுடன், வரும் தலைமுறையினருக்கு நமது கடல்சார் பாரம்பரியத்தின் வளமையை பறைசாற்றுவதாக விளங்கும்.

பன்முகச் சிறப்புவாய்ந்த வளாகமாக உருவாகவுள்ள  இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் தலைமையிலான நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படும் எதிர்காலக் கட்டங்களின் வளர்ச்சிக்காக, ஒரு தனிச் சங்கம் அமைக்கப்படும்.

திட்டத்தின் 1A கட்டப் பணிகள்  60% அளவுக்கு ஏற்கனவே முடிவடைந்துள்ளதுஇதனை 2025 -ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம், பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சி மூலம் உருவாக்கப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த பாரம்பரிய அருங்காட்சியகமாக நிறுவப்படும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது, சுமார் 22,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 7,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம்  வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, உள்ளூர் சமூகங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு குழுக்களுக்கு பெரிதும் உதவும்.

இந்தியாவின் 4,500 ஆண்டுகள் பழமையான கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் லோதலில் உலகத் தரம் வாய்ந்த தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை அமைத்து வருகிறது.

இந்தப் பெருந்திட்டம் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானம் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் பல்வேறு கட்டங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதில்: கட்டம் 1A-யில் 6 காட்சியகங்களை கொண்ட அருங்காட்சியகம் இருக்கும்.

கட்டம் 1B-ல் மேலும் 8 காட்சியகங்களுடன்  அருங்காட்சியகம், உலகின் மிக உயரமான கலங்கரை விளக்க அருங்காட்சியகம், சுமார் 1500 கார்கள் நிறுத்தும் வகையிலான பார்க்கிங் வசதி, உணவு மண்டபம், மருத்துவ மையம் போன்றவை இடம் பெறும்.

இரண்டாம் கட்டத்தில் கடலோர மாநிலங்கள் அரங்குகள், விருந்தோம்பல் மண்டலம் (கடல்சார் கருப்பொருள் சுற்றுச்சூழல் ரிசார்ட் மற்றும் அருங்காட்சியகங்களுடன்), நிகழ்நேர லோதல் நகர பொழுதுபோக்கு, கடல்சார் நிறுவனம் மற்றும் விடுதி, 4 தீம் அடிப்படையிலான பூங்காக்கள்  ஆகியவை அமைக்கப்படும்.

அகமதாபாத் மாவட்டம், தோல்கா வட்டத்தைச் சேர்ந்த லோதல் தேசிய நெடுஞ்சாலை மற்றும்  மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளது. அகமதாபாத், பாவ்நகர், ராஜ்கோட் போன்ற நகரங்களுடன் சிறந்த இணைப்பை கொண்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லோதல் நகரம் கி.மு.2400-ம் ஆண்டில் சிந்துசமவெளி பகுதியில் பழமையான வர்த்தக துறைமுகம் அமைந்த பகுதியாக திகழ்ந்தது என தொல்லியல் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063742

***

PKV/AG/KR


(Release ID: 2063769) Visitor Counter : 56