தேசிய மனித உரிமைகள் ஆணையம்
வடமேற்கு தில்லியின் அலிப்பூர் பகுதியில் திறந்த சாக்கடையில் விழுந்து சிறுவன் ஒருவன் இறந்ததாக கூறப்படுவதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது
Posted On:
10 OCT 2024 11:47AM by PIB Chennai
வடமேற்கு தில்லியின் அலிப்பூர் பகுதியில் 2024, அக்டோபர் 7 அன்று திறந்த சாக்கடையில் விழுந்து ஐந்து வயது சிறுவன் ஒருவன் இறந்ததாக வெளியான ஊடகச் செய்தி அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. அங்கு வேலை செய்த ஒப்பந்ததாரர் எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காமல் பல்வேறு இடங்களில் வடிகால்களைத் திறந்து வைத்ததாக கூறப்படுகிறது. சமீப காலங்களில் தேசிய தலைநகரில் இதுபோன்று நடந்த ஐந்தாவது சம்பவம் இதுவாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் தேசிய தலைநகரில் தொடர்ந்து நடப்பது மிகவும் கவலைக்குரியது. தில்லியில் நீரில் மூழ்கி பல மனித உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், இது குறித்து தாமாக முன்வந்து அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
திறந்த சாக்கடையில் விழுந்து சிறுவன் இறந்தது குறித்து, நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தேசிய தலைநகர் தில்லி அரசின் தலைமைச் செயலாளர், தில்லி காவல்துறை ஆணையர், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர், தில்லி மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுபோன்ற அனைத்து வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கையின் நிலை, பொறுப்பான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ஆகியவை இந்த அறிக்கையில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் எடுத்த / முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆணையம் அறிய விரும்புகிறது என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024, அக்டோபர் 8 அன்று வெளியான ஊடக ச் செய்தியின்படி, இந்த மாத தொடக்கத்தில், வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸில் திறந்த சாக்கடையில் விழுந்து இரண்டரை வயது சிறுமி உயிர் இழந்தார். செப்டம்பர் மாதம், வடகிழக்கு தில்லியின் பஜன்புராவில் 32 வயதான ஒருவர் திறந்த சாக்கடையில் விழுந்து இறந்தார். ஆகஸ்ட் மாதம், வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் திறந்த சாக்கடையில் ஏழு வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம், பஸ்சிம் விஹார் பகுதியில் ஒரு வடிகாலில் விழுந்து ஒருவர் இறந்தார். ஜூலை மாதம், கிழக்கு தில்லியின் காசிப்பூரில் ஒரு சாக்கடையில் ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்த சம்பவம் பெரும் புயலை உருவாக்கியது. அதே மாதத்தில் வடக்கு தில்லியின் புராரியில் கார் கால்வாயில் விழுந்ததில் மேலும் ஒருவர் இறந்தார்.
********
(Release ID: 2063735)
SMB/KR
(Release ID: 2063760)
Visitor Counter : 42