சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய அஞ்சல் துறை தேசிய அஞ்சல் வாரத்தைக் கொண்டாடுகிறது

Posted On: 09 OCT 2024 2:28PM by PIB Chennai

தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவரான திரு ஜி. நடராஜன், புகழ் பெற்ற ஓவியர் திரு எம். ட்ராட்ஸ்கி மருதுவின் சென்னையைப் பற்றிய ஓவியங்களைக் கருப்பொருளாகக் கொண்டு 'அன்புள்ள சென்னைக்குஎன்கின்ற தலைப்பில் தொகுப்புகளாகப் புகைப்பட அஞ்சல் அட்டைகளை வெளியிட்டார்.

திரு எம். ட்ராட்ஸ்கி மருது, பல்வேறு காட்சி ஊடகங்களில் அவரது கலை திறனுக்காகப் புகழ் பெற்றவர். அவர் மேன்மை தங்கிய இக்கலைப்பணியில் ஐம்பது ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தனது எளிமையான ஓவிய வரிகளால் ஓவியத்தில் உணர்ச்சி, வடிவம் மற்றும் ஆழத்தினை நேர்த்தியாக எடுத்துரைப்பதில் வல்லமை பெற்றவர். சென்னையின் சாராம்சத்தை உள்ளடக்கிய இவரின் இவ்வோவியங்களில் அதன் ஒவ்வொரு வரிகளிலும் சென்னையின் உணர்ச்சிமிகு உயிரோட்டம் வெளிப்படுகிறது.

இவ்விழாவின் முதன்மை விருந்தினராக புகழ் பெற்ற ஓவியரும், திரைப்பட நடிகருமான திரு சிவகுமாரும், கௌரவ விருந்தினராக மூத்ததமிழ் பத்திரிக்கையாளரும், கருத்தோவியருமான திரு மதனும் கலந்துகொண்டனர். சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் வெளியிட்ட அஞ்சல் அட்டைகளைத் திரு சிவகுமார் பெற்றுக்கொண்டார்.

இதுதொடர்பான நினைவுச்சின்ன பெட்டியையும் அஞ்சல் துறைத் தலைவர் இவ்விழாவில் வெளியிட்டார். இந்நினைவுச்சின்னம் பெட்டியில் சென்னையைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு நோட்டுப் புத்தகம், சாவிக்கொத்து, பேனா, பென்சில் மற்றும் அஞ்சல் சேவைகளின் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டவை இடம்பெற்றுள்ளன. இந்த பெட்டியின் விலை ரூ.750/- ஆகும். இது அண்ணா சாலையில் உள்ள ஃபிலாடெலிக் பணியகத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. சென்னையின் புகைப்பட அஞ்சல் அட்டைகளும் ஃபிலாடெலிக் பணியகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்தப் புகைப்பட அஞ்சல் அட்டை தொகுப்பு ஒன்று ரூ.200/- க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.

சென்னை நகர மண்டல உதவி இயக்குநர் (வணிக மேம்பாடு)
திரு பாபு  அனைவரையும் வரவேற்றார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் திரு ஜி. நடராஜன், தலைமை உரை நிகழ்த்தினார். கௌரவ விருந்தினர்களான திரு மதன், திரு எம். ட்ராட்ஸ்கி மருது ஆகிய இருவரும் சென்னை மற்றும் ஓவியக்கலை பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியாக, சென்னை நகர மண்டல உதவி இயக்குநர் (அஞ்சல் மற்றும் நிறுவனம்) திருமதி கே. ஹேமலதா நன்றியுரை நிகழ்த்தினார்.

ஆண்டுதோறும், அக்டோபர் 7 முதல் 11 வரை, அஞ்சல்துறை அஞ்சல் வாரத்தை கொண்டாடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய அஞ்சல் துறையின் வளர்ந்துவரும் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெண் குழந்தைகளின் நிதி அதிகாரம், ஆதார் புதுப்பிப்புகள் மற்றும் பிறதேவைக்கேற்ப சேவைகள் வழங்குதலுக்குக் குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

***



(Release ID: 2063439) Visitor Counter : 44


Read this release in: English