கலாசாரத்துறை அமைச்சகம்
பிராகிருத மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
Posted On:
04 OCT 2024 4:49PM by PIB Chennai
மத்திய இந்தோ - ஆரிய மொழிகளின் வரிசையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராகிருதம், இந்தியாவின் வளமான மொழியியல், கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த பண்டைய மொழி பல நவீன இந்திய மொழிகளுக்கு ஒரு அடித்தளமாக செயல்படுவது மட்டுமல்லாமல், துணைக் கண்டத்தின் வரலாற்றை வடிவமைத்த பல்வேறு மரபுகள், தத்துவங்களை உள்ளடக்கியது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மராத்தி, பாலி, அசாமி, பெங்காலி மொழிகளுடன் பிராகிருத மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க 2024 அக்டோபர் 03 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிராகிருதத்தின் வரலாற்று முக்கியத்துவம்
பிராகிருத மொழியின் தொன்மை மொழியியலாளர்கள், அறிஞர்களிடையே பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பாணினி, சந்த், வரருச்சி, சமந்தபத்ரா உள்ளிட்ட புகழ்பெற்ற ஆச்சார்யர்கள் அதன் இலக்கண கட்டமைப்பை வடிவமைத்துள்ளனர். பிராந்திய இலக்கியத்தில் பிராகிருதத்தின் பதிவுகள் தெளிவாகத் தெரிகின்றன.
பிராகிருத மொழி இந்திய மொழியியல், பேச்சு வழக்குகளைப் புரிந்து கொள்வதற்கு அடித்தளமாக இருப்பது மட்டுமல்லாமல், வளமான பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.
பிராகிருத கல்வெட்டுகள் முக்கியமான வரலாற்று பதிவுகளாக செயல்படுகின்றன. அவை இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. மௌரியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், அசோக மன்னர், கார்வெல் ஆகியோரின் கல்வெட்டுகள் முதன்மையாக பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.
பிராகிருத மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க கலாச்சார, வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பண்டைய இந்திய நாகரிகத்தின் போது செழித்து வளர்ந்த பிராகிருத மொழிகள், இந்தியாவின் வளமான இலக்கிய பாரம்பரியத்திற்கு, குறிப்பாக சமண மற்றும் பௌத்த நூல்களின் பகுதிகளுக்கு ஒரு முக்கிய இணைப்பாக செயல்படுகின்றன. இந்த அங்கீகாரம் பிராகிருதத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், பண்டைய தத்துவங்கள், கலாச்சாரம், கலை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக அதன் அந்தஸ்தை உயர்த்துகிறது. பிராகிருதத்தை ஊக்குவிப்பதன் மூலம், பழங்கால இலக்கிய மரபுகளைப் பாதுகாத்து புத்துயிர் பெறுவதையும், இந்தியாவின் மாறுபட்ட மொழியியல் மொழியியல் சூழலைப் பற்றிய சமகால புரிதலை வளப்படுத்துவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
----
PLM/KPG/KR/DL
(Release ID: 2062083)
Visitor Counter : 43