பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல்

இந்தியாவில் பழங்குடியினர் நலனுக்கான அரசுத் திட்டங்கள்

Posted On: 03 OCT 2024 10:43AM by PIB Chennai

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பழங்குடியினர் மக்கள் தொகை 10.45 கோடி அல்லது மொத்த மக்கள்தொகையில் 8.6% எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 705-க்கும் அதிகமான  தனித்துவ குழுக்களை உள்ளடக்கிய இந்த சமூகங்கள், நாடு முழுவதும் பரவியுள்ளன. இவை பெரும்பாலும் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் வாழ்கின்றன. இந்தப்  பழங்குடி சமூகங்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும், நிலையான வளர்ச்சி, கலாச்சார பாதுகாப்பு, சமூக-பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, மத்திய அரசு அவர்களின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் செயல்படுத்துகிறது.

பழங்குடியினர் மேம்பாட்டிற்கு மத்திய அரசு கவனம் செலுத்தும் முயற்சிகள் 1974-75-ம் ஆண்டில் பழங்குடியினர் துணைத் திட்டத்தை  செயல்படுத்தியதிலிருந்து தொடங்குகின்றன. இந்தத் திட்டங்கள் பல்வேறு அமைச்சகங்களின்  ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் பழங்குடியினர் நலனை இலக்காகக் கொண்டிருப்பதை உறுதி செய்தன. நிதி அர்ப்பணிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது, பழங்குடியினர் துணைத் திட்ட பட்ஜெட் ஆண்டுக்கு ரூ.25,000 கோடியிலிருந்து 2023-24-ல் ரூ.1.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட் 2024-25 பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டில்  மேலும்  ரூ.13,000 கோடியை அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டின் மதிப்பீட்டை விட 73.60% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

அக்டோபர் 2, 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் பழங்குடி மக்கள் கிராம மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கினார். ரூ.79,150 கோடிக்கும் அதிக செலவிலான, இந்த லட்சியத் திட்டம் சுமார் 63,000 பழங்குடி கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 தொகுதிகளில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்களுக்கு இந்தத் திட்டம்  பயனளிக்கிறது. இது மத்திய அரசின் 17 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 25 தலையீடுகளை ஒருங்கிணைத்ததாகும்.

பழங்குடி சமூகங்களுக்கு  அரசின் கல்வி முயற்சிகளில் முக்கிய அங்கம் ஏகலைவா மாதிரி உறைவிடப்  பள்ளிகள் . இந்தப் பள்ளிகள் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான அணுகலை எளிதாக்குகின்றன. கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம், ஏகலைவா மாதிரி உறைவிடப்  பள்ளிகள் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலுக்கான குறிப்பிடத்தக்க கருவியாக உருவெடுத்துள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை 480 மாணவர்கள் உள்ளனர்.

பழங்குடி சமூகங்களுக்கான கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை திறந்து வைத்த பிரதமர், ரூ.2,800 கோடி மதிப்பிலான 25 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தப்  பள்ளிகள் நவோதயா வித்யாலயாக்களுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் பழங்குடி கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க சிறப்பு வசதிகளை வழங்குகின்றன, அதே நேரத்தில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டையும் ஊக்கப்படுத்துகின்றன.

ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ .1,360 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இந்தத் திட்டங்கள், சாலை இணைப்பை மேம்படுத்துதல், அங்கன்வாடிகள் மற்றும் பல்நோக்கு மையங்களை நிர்மாணித்தல், பள்ளி விடுதிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. மேலும் 75,800-க்கும் அதிகமான  குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள்  வீடுகள் மின்மயமாக்கப்படுவதாகவும், 275 நடமாடும்  மருத்துவ பிரிவுகள் மற்றும் 500 அங்கன்வாடி மையங்களை செயல்படுத்துவதாகவும் அரசு அறிவித்துள்ளது. கூடுதலாக, 250 வன் தன் விகாஸ் கேந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் 5,550-க்கும் அதிகமான குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி கிராமங்களுக்கு  சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு அதிகாரமளிப்பதற்கான முக்கிய அரசுத் திட்டங்கள்

1. மெட்ரிக் மற்றும்  மெட்ரிக் படிப்புக்குப் பிந்தைய உதவித்தொகை திட்டங்கள்

இந்த உதவித்தொகை இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதையும் பழங்குடி மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன:

2. பழங்குடி மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு உதவித்தொகை

இந்தத் திட்டம் திறமையான பழங்குடி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை, முனைவர், முது முனைவர் படிப்புகளைத் தொடர வாய்ப்புகளை வழங்குகிறது. ஆண்டுதோறும் 20 இடங்களை ஒதுக்குகிறது, பெண்களுக்கு 30% ஒதுக்குகிறது.

3. குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடி குழுக்கள்  மேம்பாட்டுத் திட்டம்

இந்தத்  திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி சமூகங்களை இலக்காகக் கொண்டது. சுகாதாரம், கல்வி, சுத்தமான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றிற்கான அணுகலை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது. 200 மாவட்டங்களில் 22,000 குடியிருப்புகளில் உள்ள சுமார் 7 லட்சம் குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடி குடும்பங்கள் இந்த விரிவான வளர்ச்சித் திட்டங்களின் மூலம் பயனடைகின்றன.

4. பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆதரவு

பழங்குடியின கலாச்சாரத்தை பாதுகாப்பதிலும், அவர்களின் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதிலும் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான ஆதரவு திட்டம் பழங்குடியினர் நலன், மொழிகள், மரபுகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் ஆவணங்களை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் கலாச்சார விழாக்கள் மற்றும் பரிமாற்ற திட்டங்களுக்கும்  ஏற்பாடு செய்கிறது.

5. பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம்

அனைத்து மத்திய அமைச்சகங்களும் பழங்குடியினர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதை பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் உறுதி செய்கிறது, 41 அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. பழங்குடியினர் பகுதிகளில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது, இது குறிப்பிடத்தக்க பட்ஜெட் ஒதுக்கீடுகளால் ஆதரிக்கப்படுகிறது.

6. பழங்குடி மாணவர்களுக்கான தேசிய ஆய்வு உதவித்தொகை

இந்த ஆய்வு உதவித்தொகை  திட்டம் உயர்கல்வியைத் தொடரும் பழங்குடியின மாணவர்களுக்கு முழுமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் ஆதரவளிக்கிறது, சரியான நேரத்தில் நிதி உதவி மற்றும் டிஜிலாக்கர் ஒருங்கிணைப்பு மூலம் குறைகளை நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.

7. தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, சலுகை வட்டி விகிதங்களில் பழங்குடி பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.

8. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு அதன் ட்ரைப்ஸ் இந்தியா (TRIBES India) விற்பனை நிலையங்கள் மற்றும் இ-வணிக தளங்கள் மூலம் பழங்குடியினர் தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது, பழங்குடி கைவினைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது. கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் பிற பழங்குடியினர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்த சமூகங்களுக்கு சந்தை இணைப்புகளை உருவாக்குகிறது.

9. ஆடிப் பெருவிழா மற்றும் கலாச்சார விழாக்கள்

இந்த திருவிழாக்கள் பழங்குடி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தளங்களாகும்.  பழங்குடியினர் திறன் மேம்பாடு, பாரம்பரிய மேம்பாடு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர்கள் உள்ளனர். பழங்குடியினர் கௌரவ தினம்  2022-ல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,அறிவித்த  திட்டங்களில் தூய்மை இந்தியா இயக்கம், கரிம கழிவு மேலாண்மைக்கான கோபர்தன் திட்டம், தாய் சேய்  ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிரதமரின் தாய்மை போற்றுதும் திட்டம் ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

இந்தியாவின் பழங்குடி சமூகங்களை கௌரவித்தல் மற்றும் கொண்டாடுதல்

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய, பணிய மறுத்த பழங்குடியினர் வாழ்ந்த மாநிலங்களில் 10 பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022, நவம்பர் 01 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் மன்கர் தாமை மேம்படுத்த ஒரு வரைபடத்தை தயாரிக்க அழைப்பு விடுத்தார். ராஜஸ்தான்-குஜராத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மன்கர் தாம், 1913 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட வெகுஜன துப்பாக்கிச் சூட்டில் 1500-க்கும் அதிகமான பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிர் இழந்த இடமாகும். ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அரசுகளின் கூட்டுத் திட்டமாக மன்கர் தாம் பழங்குடியின பாரம்பரியம் மற்றும் அவர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தேசிய நினைவகமாக உருவாக்கப்படும்.

இந்த முயற்சிகள் அனைத்தும், அரசால் எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகளுடன், பழங்குடி சமூகங்களை முதன்மை  நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கான பாதையை வகுத்துள்ளன, அதே நேரத்தில் அவர்களின் கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளை மதிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061352

****

SMB/RR/KR

 



(Release ID: 2061479) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Manipuri , Gujarati