பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் அடுத்த விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
Posted On:
21 SEP 2024 1:37PM by PIB Chennai
தற்போது விமானப்படையின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங்கை, ஏர் சீஃப் மார்ஷல் அந்தஸ்தில், அடுத்த தலைமைத் தளபதியாக, செப்டம்பர் 30ஆம் தேதி பிற்பகல் முதல் அமலுக்கு வரும் வகையில், அரசு நியமித்துள்ளது. தற்போதைய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி, செப்டம்பர் 30, 2024 அன்று ஓய்வு பெறுகிறார்.
அக்டோபர் 27, 1964 இல் பிறந்த ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், டிசம்பர் 1984 இல் இந்திய விமானப் படையின் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் நீடித்த அவரது நீண்ட மற்றும் புகழ்பெற்ற சேவையின் போது, அவர் பல்வேறு நிலைகள், பொறுப்புக்களில் பணிபுரிந்தார்.
தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்பு படை பணியாளர் கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர், விமான அதிகாரி ஒரு தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளராகவும், பலவிதமான நிலையான மற்றும் ரோட்டரி விங் விமானங்களில் 5,000 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த அனுபவம் கொண்டவர்.
அவரது பணியின் போது, சோதனை பைலட்டாக, அவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் MiG-29 மேம்படுத்தல் திட்ட மேலாண்மைக் குழுவை வழிநடத்தினார். அவர் தேசிய விமான சோதனை மையத்தில் திட்ட இயக்குனராகவும் இருந்தார். இலகுரக போர் விமானமான தேஜாஸின் விமான சோதனை பிரிவிலும் பணிபுரிந்தார். தென்மேற்கு விமானக் கட்டளை பிரிவில் விமானப் பாதுகாப்புத் தளபதி மற்றும் கிழக்கு விமானக் கட்டளையில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரி ஆகிய முக்கியமான பொறுப்புக்களை அவர் வகித்துள்ளார். விமானப்படையின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் மத்திய விமான கட்டளைப் படையின் ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீப் ஆகவும் இருந்தார்..
*****
PKV / KV
(Release ID: 2059938)
Visitor Counter : 38