சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை மற்றும் சுகாதாரத் தீர்வுகள் இந்தியா மாநாடு - மத்திய சுகாதார அமைச்சகமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து நடத்துகின்றன

Posted On: 25 SEP 2024 3:41PM by PIB Chennai

மத்திய அரசின் சுகாதார அமைச்சகமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து தில்லியில் பருவநிலை மற்றும் சுகாதார தீர்வுகள் இந்தியா என்ற தலைப்பிலான மாநாட்டை நடத்துகின்றன. இன்று தொடங்கிய இந்த இரண்டு நாள் மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒருங்கிணைத்துள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறைக்கு தேவையான உத்திகளை பருவநிலை மாற்றம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய இரட்டை அம்சங்களுக்கு ஏற்ப வகுப்பதை இந்த இரண்டு நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு. அபூர்வா சந்திரா தமது உரையில், சுகாதாரத் திட்டமிடலில் பருவநிலை கருத்தை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்தினார். இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளின் தனித்துவமான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பருவநிலை-நெகிழ்திறன் கொண்ட சுகாதார முறையை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு இந்த மாநாடு ஒரு சான்றாகும் என அவர் தெரிவித்தார்.

 

எதிர்பாராத பருவநிலை தாக்கங்களைச் சமாளிக்கவும், அனைவருக்கும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தவும் நமது சுகாதாரத் துறை ஆயத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற உலகளாவிய அமைப்புகளுடன் சுகாதார அமைச்சகம் ஒத்துழைத்து செயல்படுவதாக அவர் கூறினார். ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற தொலைநோக்கு பார்வையை ஒருங்கிணைந்து செயல்பட்டால் அடைய முடியும் என்று அவர் கூறினார்.

 

மத்திய அரசின் ஜி20 ஷெர்பா திரு அமிதாப் காந்த், தமது தலைமை உரையில், அதிகரித்து வரும் வெப்பநிலை, கணிக்க முடியாத வானிலை முறைகள் மற்றும் சுகாதார அமைப்புகளில் வளர்ந்து வரும் சுமை ஆகியவற்றை நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த, நீடித்த தீர்வுகளை வடிவமைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்றார். ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற முக்கிய கூட்டாளர்களுடனான ஒத்துழைப்பின் மூலம், சுகாதார செயல்பாடுகளை சிறப்பாக வடிவமைக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன் பேசுகையில், நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளுக்கான நாட்டின் உறுதிப்பாடுகள் குறித்து விவரித்தார். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நமக்கு பெரிய அளவிலான திட்டமிடல் தேவை என்று அவர் கூறினார்.

 

ஆசிய வளர்ச்சி வங்கியின் மனித மற்றும் சமூக வளர்ச்சித் துறை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் அயாகோ இனாகி கருத்துத் தெரிவிக்கையில், பருவநிலை மாற்றம் மற்றும் பொது சுகாதாரத்தின் ஒருங்கிணைப்பு ஒரு அவசர சவாலை முன்வைக்கிறது என்றார். இந்தியாவின் பரந்த மற்றும் மாறுபட்ட நிலப்பரப்புகள் பருவநிலையால் தூண்டப்படும் சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான முக்கிய களமாக அமைகின்றன என்று அவர் கூறினார். கூட்டு முயற்சிகள் மூலம், பருவநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் தாக்கங்களைத் தாங்கும் திறன் கொண்ட, நீடித்த சுகாதார அமைப்புகளை நம்மால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058596

 

***

PLM/RR/KR/DL


(Release ID: 2058706) Visitor Counter : 41


Read this release in: English , Urdu , Hindi