சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஐ.நா. பொதுச் சபையின் 79-வது அமர்வில் "புத்துயிர் பெற்ற பன்முகத்தன்மை: ஒன்றாக இணைந்து எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் உறுதியேற்றல்" என்ற தலைப்பில் மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் உரையாற்றினார்
Posted On:
25 SEP 2024 9:10AM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல், ஐக்கிய நாடுகள் சபையில் "புத்துயிர் பெற்ற பன்முகத்தன்மை: ஒன்றாக இணைந்து எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் உறுதியேற்றல்" என்ற தலைப்பில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்வை எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டத்திட்டம், உலகளாவிய நிதியம் மற்றும் எய்ட்ஸ் நிவாரணத்திற்கான அமெரிக்க அதிபரின் அவசர திட்டம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல், 2030-ஆம் ஆண்டுக்குள் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயை ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கை (எஸ்.டி.ஜி) அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (2021-2026) 5-வது கட்டம் உட்பட ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்க்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் முக்கிய உத்திகளை அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். சமீபத்திய இந்தியா ஹெச்.ஐ.வி மதிப்பீடுகள் 2023 அறிக்கையின்படி, இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக, முதிர் அகவையர் இடையேயான பாதிப்பு 0.2% ஆகவும், வருடாந்திர புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் சுமார் 66,400 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வருடாந்திர ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் 2010 முதல் 44% குறைந்துள்ளன, இது உலகளாவிய குறைப்பு விகிதத்தை விட 39% அதிகமாக உள்ளது.
"புதுமையான திட்டங்கள் மற்றும் வலுவான கூட்டாண்மைகள் மூலம் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது" என்று கூறிய அமைச்சர், கல்வி நிறுவனங்களில் சிவப்பு ரிப்பன் கிளப்புகள் மற்றும் வருடாந்திர ரெட் ரன் மாரத்தான் உள்ளிட்ட வெகுஜன விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற இளைஞர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளை சுட்டிக்காட்டினார்.
"இந்தியா அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் விரிவான ஹெச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனையை வழங்குகிறது, ஆண்டுதோறும் 30 மில்லியனுக்கும் அதிகமான இலவச ஹெச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்படுகின்றன" என்று திருமதி படேல் கூறினார். "மொத்தத்தில், 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பொது சுகாதார அமைப்புகள் மூலம் இலவச ரெட்ரோவைரல் எதிர்ப்பு சிகிச்சையைப் (ஏ.ஆர்.டி) பெறுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ரெட்ரோவைரல் எதிர்ப்பு மருந்துகளை வழங்கும் நாடாக இந்தியாவின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு தற்போது உலகளாவிய ரெட்ரோவைரல் எதிர்ப்பு மருந்துகளில் 70% க்கும் அதிகமானவற்றை வழங்குகிறது, இது தேவைப்படும் நாடுகளுக்கு மலிவான விலையில் கிடைக்கப்படுவதை உறுதி செய்கிறது. "தரமான சிகிச்சையை உலகளவில் அணுகுவதன் மூலம் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் பங்கேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று அமைச்சர் கூறினார்.
"ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 2017 மூலம் ஹெச்.ஐ.வியைப் பற்றிய தவறான தோற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இது அனைத்து இந்திய மாநிலங்களும் குறைகளைக் கையாளவும், ஹெச்.ஐ.வி தடுப்புக் கொள்கைகளை மேம்படுத்தவும் குறைதீர்ப்பாளர்களை நியமிப்பதை உறுதி செய்கிறது. கூடுதலாக, காசநோய், ஹெபடைடிஸ் வைரஸ் மற்றும் தொற்றா நோய்களை சமாளிப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட தேசிய சுகாதார திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான இந்தியாவின் அணுகுமுறை, ஹெச்.ஐ.வி உடன் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் இணை நோய்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது”, என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்தும் வகையில், "ஒத்துழைப்பின் மூலம், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம், அனைவருக்கும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம்”, என்று கூறி அமைச்சர் தமது உரையை நிறைவு செய்தார்.
BR/KR
***
(Release ID: 2058483)
Visitor Counter : 61