நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

என்பிஎஸ் வத்சல்யா: சிறார்களுக்கான ஒரு அற்புதமான ஓய்வூதியத் திட்டம்

Posted On: 20 SEP 2024 12:40PM by PIB Chennai

நீண்டகால நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் சிறு வயதிலேயே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாக என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் அமைந்துள்ளது. மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தேசிய ஓய்வூதிய முறை வத்சல்யா (NPS Vatsalya) திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த புதுமையான ஓய்வூதியத் திட்டம் சிறார்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தால் (PFRDA) ஒழுங்குபடுத்தப்பட்டு நிர்வகிக்கப்படும் இந்த புதுமையான சேமிப்பு, ஓய்வூதிய திட்டம், பல தலைமுறைகளாக நிதி திட்டமிடலையும் நிதிப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. என்பிஎஸ் வத்சல்யா இளம் சந்தாதாரர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், சிறு வயதிலிருந்தே சேமிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, ஒரு குழந்தை பிறக்கும் போதே அந்த குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு ரூ.50,000 செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது ரூ.25 லட்சம் கிடைக்கும். அதே வேளையில் அந்த குழந்தை தனது பருவ வயதை எட்டி, தாமாக வருவாய் ஈட்ட தொடங்கும் போது, தாமே இந்தத் தொகையை செலுத்தினால், அவருடைய ஓய்வு வயதின்போது (60 வயது) ரூ.12.5 கோடி வரை கிடைக்கும்.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கும் என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் அவர்களது பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். குறைந்தது ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தின்படி சேமிப்புத் தொகைக்கு உச்சவரம்பு ஏதுமில்லை.

இந்தத் திட்டம், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் பொருந்தும். அவர்களுக்கான சந்தா தொகையை பெற்றோர் அல்லது பாதுகாவலர் செலுத்தலாம். இந்தத் திட்டக் கணக்குகளை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வாயிலாகவும், e-NPS என்ற இணையதளம் வாயிலாகவும் தொடங்கலாம். பாதுகாவலரின் ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை இருப்பிடத்திற்கான ஆதாரமாக காட்டலாம். பாதுகாவலரின் வருமானவரி நிரந்தர கணக்கு எண் அல்லது படிவம் 60-ன் படி உறுதிமொழி அளித்தும் கணக்கு தொடங்கலாம். கணக்குத் தொடங்கப்படும் குழந்தையின் வயது சான்றாக, பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் போன்றவற்றையும் அடையாளமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தால் அதற்கான வங்கி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

குழந்தையின் கல்வி, குறிப்பிட்ட வகை உடல்நலக் குறைபாடு, உடல் ஊனத்திற்கான சிகிச்சை போன்ற தேவைகளுக்காக, முதலீடு தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இது போன்று 3 முறை திரும்பப் பெற அனுமதிக்கப்படும். 18 வயது நிரம்பும்போது, இத்திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி அளிக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=152167&ModuleId=3

***

PLM/RS/KR



(Release ID: 2057006) Visitor Counter : 87