தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மோடி 3.0 அரசின் முதல் 100 நாளில் மகளிர் சார்ந்த முன்னேற்றம்
Posted On:
19 SEP 2024 5:01PM by PIB Chennai
இந்தியாவை 2047-க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கை நனவாக்க இந்தியா பணியாற்றி வரும் நிலையில், அனைத்து தரப்பினரையும், குறிப்பாக பெண்களுக்கு நலத்திட்டங்களின் பலன் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் அரசின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏழைப் பெண்கள் குறிப்பாக கிராமப்புற பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை கருத்தில் கொண்டு, பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், அவர்களது திறமையை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஏழைப் பெண்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நிதி சேவைகளைப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 103,006,317 குடும்பங்கள் சுய உதவிக்குழுக்களில் சேர்க்கப்பட்டு, 751,557.2 லட்சம் சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாகவும் ரூ.2447160.8 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
லட்சாதிபதி சகோதரி திட்டம்: பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல்
சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள பெண் குடும்ப வருமானமாக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் (சராசரியாக மாதம் ரூ.10,000) வருமானம் ஈட்டுபவராக இருந்தால் அவர் லட்சாதிபதி சகோதரி என்றழைக்கப்படுகிறார். இத்திட்டத்தின் படி, மோடி அரசின் 3-வது பதவிக்காலத்தில் மட்டும் நாட்டில் இதுவரை 11 லட்சம் பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது என்றார்.
எனவே மகளிர் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக பல்வேறு அமைச்சகங்களுக்கும் ரூ.3.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது பெண்கள் அதிகளவில் வேலையில் சேர்வதை ஊக்குவிப்பதுடன், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை அமைப்பதன் வாயிலாகவும் பெண்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்படுகிறது.
மாநில அரசுகள் மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து பெண்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் 20லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பைப் பெறத்தக்க திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
முத்ரா கடன்கள்
பெண் தொழில்முனைவோருக்கான முத்ரா கடன் வரம்பு ரூ 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் தங்களது தொழிலை அபிவிருத்தி செய்ய உறுதுணையாக இருக்கும்.
உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகள்
பெண் தொழில் முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் சுய உதவி குழுவினருக்கும், பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களுக்கும் நிதி ஆதாரம் கிடைப்பதை உறுதி செய்ய, ஸ்டாண்ட் அப் இந்தியா, தேசிய வாழ்வாதார இயக்கம் மற்றும் பிரதமரின் விஸ்வகர்மா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2056696
***
MM/AG/KR
(Release ID: 2056896)
Visitor Counter : 48