உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
அனைவரையும் உள்ளடக்கிய விமானப் போக்குவரத்துடன் வளர்ந்து வரும் இந்தியா - 2014-ல் 74 ஆக இருந்த விமான நிலையங்கள், 2024-ல் 157 ஆக அதிகரித்துள்ளது
Posted On:
15 SEP 2024 5:26PM by PIB Chennai
"இன்று, உலகளாவிய சிவில் விமானப் போக்குவரத்து சூழல் அமைப்பில் இந்தியா சிறந்த நாடுகளல் ஒன்றாக உள்ளது. வெறும் பத்தாண்டுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது."
--பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் விமானத் துறை ஒரு பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதிகரித்து வரும் தேவை, ஆதரவான அரசு கொள்கைகள் ஆகியவை அதன் வளர்ச்சிக்கு காரணமாகும். இந்த மாற்றம் இந்தியாவை உலகளாவிய விமான சூழல் அமைப்பில் முன்னணிக்குக் கொண்டு சென்றுள்ளது. அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து குறித்த 2-வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு:
சிவில் விமானப் போக்குவரத்து குறித்த 2-வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் மாநாடு, 2024 செப்டம்பர் 12 அன்று தில்லி பிரகடனத்தை முறையாக ஏற்றுக்கொண்ட பின் நிறைவடைந்தது. தில்லி பிரகடனம் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், விமானப் போக்குவரத்து சவால்களை எதிர்கொள்வதற்கும், நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி பேசுகையில், "சாமானிய மக்களுக்கும் விமானப் பயணத்தை கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். விமானப் பயணத்தை பாதுகாப்பானதாகவும், மலிவானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்ற வேண்டும். அதை அடைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
இந்திய விமானிகளில் 15% பெண்கள் என்று குறிப்பிட்ட அவர், இது உலகளாவிய சராசரியான 5%-ஐ விட கணிசமாக அதிகமாகும் என குறிப்பிட்டார்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டில் செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 74 ஆக இருந்தது. 2024-ம் ஆண்டில் அது 157 ஆக இரட்டிப்பாகியுள்ளது. 2047 க்குள் இந்த எண்ணிக்கையை 350 முதல் 400 வரை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.
இந்த வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பது அரசின் கொள்கைகள், முன்முயற்சிகள் ஆகும். அத்தகைய ஒரு முயற்சி பிராந்திய இணைப்புத் திட்டமான ஆர்சிஎஸ்-உடான் திட்டம். இது 2016-ல் தொடங்கப்பட்டது. இது சேவை இல்லாத விமான நிலையங்களுக்கு இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசு நிலைத்தன்மைக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து வருகிறது. தில்லி, மும்பை விமான நிலையங்களின் சாதனைகளில் இது தெளிவாகத் தெரிகிறது. இவை இரண்டிற்கும் மதிப்புமிக்க நிலை 4+ கார்பன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம் கார்பன் தடத்தைக் குறைப்பதிலும் பொறுப்பான விமான நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் அவற்றின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
*2 நீர் ஏரோட்ரோம்கள் உட்பட 86 விமான நிலையங்களை இணைக்கும் 583 ஆர்சிஎஸ் வழித்தடங்கள் இதுவரை செயல்படத் தொடங்கியுள்ளன
*1.43 கோடிக்கும் அதிகமான பயணிகள் உடான் திட்டத்தின் பலன்களைப் பெற்றுள்ளனர்.
*உடான் திட்டத்தின் கீழ் இதுவரை 2.8 லட்சத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
* உடான் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.4500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3751 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு, சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வுடன், உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=152143&ModuleId=3
*****
PLM / KV
(Release ID: 2055229)
Visitor Counter : 72