பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
"சமூக ரீதியில் நியாயமான, சமூக ரீதியில் பாதுகாக்கப்பட்ட பஞ்சாயத்துகள்" என்ற தலைப்பிலான தேசிய பயிலரங்கை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
10 SEP 2024 7:07PM by PIB Chennai
பீகார் மாநிலம் பாட்னாவில் "சமூக ரீதியில் நியாயமான, சமூக ரீதியில் பாதுகாக்கப்பட்ட பஞ்சாயத்துகள்" என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய பயிலரங்கை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இன்று தொடங்கி வைத்தார். இந்த தேசிய பயிலரங்கை பீகார் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையுடன் இணைந்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் செப்டம்பர் 10முதல் 12 வரை ஏற்பாடு செய்துள்ளது.
தேசிய பயிலரங்கின் தொடக்க அமர்வில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் சவுத்ரி, திரு விஜய் குமார் சின்ஹா, பீகார் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கேதார் பிரசாத் குப்தா, ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஷ்ரவன் குமார், சமூக நலத்துறை அமைச்சர் திரு மதன் சானி, நீர்வளத்துறை அமைச்சர் திரு விஜய் குமார் சவுத்ரி, பீகார் அரசின் தலைமைச் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பீகார் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு மிஹிர் குமார் சிங், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு விகாஸ் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பயிலரங்கில் உரையாற்றிய திரு ராஜீவ் ரஞ்சன் சிங், நிதி ஆதாரங்களை வழங்குதல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி முயற்சிகளை செயல்படுத்துதல், பல்வேறு டிஜிட்டல் தலையீடுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பஞ்சாயத்துகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகாரம் அளித்து வருகின்றன என்றார். இந்த நிதி ஆதாரங்களை பஞ்சாயத்துகள் திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும், "சமூக ரீதியில் நியாயமான, சமூக ரீதியில் பாதுகாக்கப்பட்ட பஞ்சாயத்துகள்" என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அரசின் திட்டங்களை சேவை மனப்பான்மையுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்துள்ளார் என்று அவர் கூறினார். இந்த இலக்கை அடைவதில் பஞ்சாயத்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளமாகும், இது வலுவாக இருந்தால், ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிமிர்ந்து நிற்கும் என்று அவர் கூறினார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் பேசுகையில், பஞ்சாயத்து பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகளை தவறாமல் ஆய்வு செய்து கல்வியின் தரத்தை மேம்படுத்த பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது, பருவநிலை மாற்றம் குறித்து கவலை தெரிவித்த அவர், கிராம பஞ்சாயத்துகள் இந்தப் பகுதிகளில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள், மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.நா முகமைகள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 900-க்கும் அதிகமானோர் தேசிய பயிலரங்கில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2053520)
SMB/AG/KR
(Release ID: 2053677)
Visitor Counter : 47