கூட்டுறவு அமைச்சகம்
சர்வதேச கூட்டுறவு கூட்டணி பொதுச்சபை, உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024 ஆகியவை புதுதில்லியில் நவம்பர் 25 முதல் 30 வரை நடைபெற உள்ளன
प्रविष्टि तिथि:
09 SEP 2024 10:24PM by PIB Chennai
சர்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ) பொதுச்சபை, உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024 ஆகியவை நவம்பர் 25 முதல் 30 வரை புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளன. உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தின் முதன்மை அமைப்பான சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) 130 ஆண்டு கால வரலாற்றில் பொதுச் சபை, உலகளாவிய கூட்டுறவு மாநாடு ஆகியவை இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளன. மத்திய கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி, ஐசிஏ-வின் தலைமை இயக்குநர் திரு ஜெரோன் டக்ளஸ், இஃப்கோ லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் யு எஸ் அவஸ்தி ஆகியோர் புதுதில்லியில் இன்று கூட்டாக செய்தியாளர் கூட்டத்தில் வரவிருக்கும் நிகழ்வுகளின் விவரங்களை விவரித்தனர்.
இந்த ஆண்டு மாநாட்டின் மையக்கருத்து "அனைவருக்கும் வளத்தை உருவாக்கும் கூட்டுறவுகள்" என்பதாகும். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2025-ன் அதிகாரப்பூர்வ தொடக்கத்தையும் இந்த மாநாடு குறிக்கும். சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2025-ஐ கொண்டாடும் நினைவு இலச்சினை இந்த மாநாட்டின் போது வெளியிடப்படவுள்ளது. இந்திய கிராமங்கள் என்ற கருப்பொருளுடன் இந்திய கூட்டுறவுகளின் தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்த இந்த மாநாடு பயன்படுத்தப்படும்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலின் படி, இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல கூட்டுறவுக்கான தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றார். உறுப்பினர் எண்ணிக்கையில், உலகில் உள்ள கூட்டுறவுகளில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது என்று டாக்டர் பூட்டானி கூறினார்.
கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் கூட்டுறவு அமைச்சகத்தின் 54 புதிய முயற்சிகளை தொடங்கியதன் மூலம் இந்தியக் கூட்டுறவுத் துறை புதிய மைல்கற்களை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியக் கூட்டுறவு அமைப்பில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மாற்றம் பிஏசிஎஸ் மாதிரி துணை விதிகளை அமல்படுத்தியது என்று டாக்டர் பூட்டானி கூறினார்.
பிஏசிஎஸ்-ஐ கணினிமயமாக்குவது, தேசிய அளவில் கூட்டுறவு அமைப்புகள் இல்லாத துறைகளான தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட், தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட், பாரதிய பீஜ் சஹ்காரி சமிதி லிமிடெட் ஆகிய மூன்று புதிய கூட்டுறவுகளை உருவாக்குவது, பிற முன்முயற்சிகள் ஆகியவை உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தில் இந்தியாவை முன்னணியில் வைத்துள்ளன என்றும், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் கூட்டுறவுத் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2053315)
SMB/AG/RR
(रिलीज़ आईडी: 2053341)