பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்தியா உயிரி எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப எக்ஸ்போ 2024-ல் நாட்டின் உயிரி எரிசக்தி முன்னேற்றத்தை பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எடுத்துரைத்தார்
Posted On:
02 SEP 2024 4:34PM by PIB Chennai
இந்தியா உயிரி எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப எக்ஸ்போ 2024 தொடக்க அமர்வில் பேசிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, உயிரி எரிசக்தி துறையில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் அதன் முக்கியப் பங்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். புதைபடிம எரிபொருட்களுக்கு மாற்றாக உயிரி எரிசக்தி அதிகரித்து வருகிறது என்று வலியுறுத்திய அமைச்சர் பூரி, குறிப்பாக இது கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதாக கூறினார்.
அமைச்சர் திரு பூரி தனது உரையில், உயிரி எரிசக்தித் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான மத்திய அரசின் உத்தி சார் முயற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பது, அந்நியச் செலாவணியை சேமிப்பது, சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் அதன் முக்கியத்துவம் பற்றி கூறினார். அரசின் உத்தி எத்தனால் மற்றும் பயோடீசல் கலப்பு, சுருக்கப்பட்ட உயிரிவாயு, நிலையான விமான எரிபொருட்கள், பயோமாஸ் பயன்பாடு (துகள்கள் மற்றும் எரிகட்டிகள் போன்றவை), உயிரி ஹைட்ரஜன் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தீர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.
2014-ல் 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு 2024-ல் 15% ஆக உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றத்தால் ஊக்குவிக்கப்பட்ட அரசு, 2025 -ம் ஆண்டு வாக்கில் 20% கலவையை எட்டுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த முயற்சி குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளது. இதில் ரூ.99,014 கோடி அந்நியச் செலாவணி சேமிப்பு, கரியமில வாயு வெளியேற்றத்தை 519 லட்சம் மெட்ரிக் டன் குறைத்தல், 173 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை மாற்றீடு செய்தல் ஆகியவை அடங்கும்.
இந்தியா முழுவதும் உள்ள 15,600-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் தற்போது வழங்கப்படும் இ-20 எரிபொருள் பரவலாகக் கிடைப்பதையும் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எடுத்துரைத்தார்.
எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட அரசின் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை பெட்ரோலிய அமைச்சர் திரு பூரி சுட்டிக்காட்டினார்.
எத்தனால் தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அதன் உற்பத்திக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் திரு பூரி கூறினார். மக்காச்சோளத்திலிருந்து பெறப்படும் எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ.9.72, சேதமடைந்த அரிசியிலிருந்து எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ.8.46 பாகு கழிவிலிருந்து எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ.6.87 ஆகியவை இதில் அடங்கும்.
இ100 எரிபொருளுக்கு இணக்கமான வாகனங்களை உற்பத்தி செய்ய வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரியை அமைச்சர் திரு பூரி வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2050907
***
SMB/KV/KR
(Release ID: 2050989)
Visitor Counter : 65