பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போலந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

Posted On: 22 AUG 2024 6:10PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (22.08.2024) போலந்து குடியரசின் பிரதமர் திரு டொனால்ட் டஸ்க்கை வார்சாவில் சந்தித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்குப் போலந்துப் பிரதமர் டொனால்ட் டஸ்க் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளித்தார்.

இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-போலந்து இடையேயான நல்லுறவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர். உணவுப் பதப்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, சுரங்கம், தூய்மைத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளையும் கலாச்சார உறவுகளையும் ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் சுட்டிக் காட்டினர். ஜாம்நகர் மகாராஜா, கோலாப்பூர் அரச குடும்பத்தினர் ஆகியோரின் தாராள மனப்பான்மையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள தனித்துவமான பிணைப்பை அவர்கள் எடுத்துரைத்தனர்.

 

உக்ரைன், மேற்கு ஆசியா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் உட்பட அனைத்து பரஸ்பர நலன் சார்ந்த முக்கியமான பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். ஐக்கிய நாடுகள் சபை, இதர சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம், பருவநிலை மாற்ற நடவடிக்கை, பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு இந்தியா-போலந்து இடையேயான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான கூட்டு அறிக்கையும் செயல் திட்டமும் [2024-2028] வெளியிடப்பட்டது.

***

PLM/DL


(Release ID: 2047777) Visitor Counter : 51