மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசிப் பணிகள்: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 17 AUG 2024 5:11PM by PIB Chennai

மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இன்று (17-08-2024), 2030-க்குள் கால்நடைகளுக்கு கோமாரி நோய்  (எஃப்எம்டி- கால்நடைகளில் கால் மற்றும் வாய் நோய்) இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கால்நடைத் துறை இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், குறிப்பாக கிராமப்புற குடும்பங்கள், பெண்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிக்கும் ஒரு முக்கியமான துறையாகும் என்று திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.

 நாட்டில் குறிப்பாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் செரோ கண்காணிப்பின் அடிப்படையில் மண்டலங்களை உருவாக்க அனைத்து மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

கால்நடை நோய்கள் பரவுவது கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். எஃப்எம்டி எனப்படும் கோமாரி நோய் காரணமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.24,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த நோயைக் கட்டுப்படுத்தி அறவே ஒழிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்து, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என அவர் கூறினார்.

மத்திய அரசு, எஃப்.எம்.டி, புருசெல்லோசிஸ் ஆகிய இரண்டு முக்கிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்காக முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ், மாடுகள், எருமைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிராக 6 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். செம்மறியாடுகள், வெள்ளாடுகளுக்கும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், 21 மாநிலங்களில் கால்நடைகளுக்கு எஃப்.எம்.டி.க்கு எதிரான தடுப்பூசிப் பணிகள் 4 வது சுற்றை நிறைவு செய்துள்ளது அவர் கூறினார். தற்போதுவரை சுமார் 82 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் 5-வது சுற்று ஏற்கனவே நிறைவடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ்எஃப்எம்டி நோயை நாட்டிலிருந்து 2030க்குள் ஒழிக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.

*****

PLM / KV


(Release ID: 2046318) Visitor Counter : 58