சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Posted On: 15 AUG 2024 4:37PM by PIB Chennai

காரைக்காலில் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் 78வது சுதந்திர தினம் இன்று (15.08.2024) கொண்டாடப்பட்டது. கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து இந்நாளில் நமது சுதந்திர இந்தியாவை அடைவதற்காக நமது முன்னோர்கள் செய்த அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் அவர்கள் பேசுகையில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதும், கௌரவிப்பதும் முக்கியம் என்றும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ், வீர் சாவர்க்கர், வி.வி.எஸ்.ஐயர், சுப்ரமணிய பாரதி, வி.ஓ. சிதம்பரம் பிள்ளை மற்றும் பலர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், அவர்களின் தொலைநோக்கு பார்வையும் விடாமுயற்சியும் இன்று நாம் போற்றும் மற்றும் அனுபவிக்கும் சுதந்திரத்தை நமக்கு பரிசளித்துள்ளது என்றும் கூறினார்.

மேலும் அவர் நம் ஜனநாயக நாடானது பசுமைப் புரச்சி, மருத்துவ முன்னேற்றங்கள், பாலின சமத்துவத்திற்கான சமூக நல நடவடிக்கைகள், பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் தரமான கல்வி, தேசிய கல்விக் கொள்கை, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், ஆத்ம-நிர்பார் அல்லது தன்னிறைவு பெறுவதற்கான பெரிய அளவிலான உள்நாட்டு உற்பத்தி, பாரீஸ் நகரில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, தடகளம் போன்ற களங்களில் ஐந்து வெண்கலம், ஒரு வெள்ளி உட்பட 6 பதக்கங்களை பெற்றது போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது என்றும் கூறினார். மேலும் அவர் நம் தேசமானது சர்வதேச அளவிலும் நமது அண்டை நாடுகளிடையேயும் ஒரு சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், வரும் தசாப்தங்களில் நாம் மிக விரைவில் ஒரு வளர்ந்த நாடாக மாறத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார்.

இறுதியாக கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து, நம் கழகம் சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபடுவோம், மேலும் நமது நிறுவனத்தை அறிவு மற்றும் புதுமைகளின் கலங்கரை விளக்கமாக மாற்றுவோம், தேசத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு ஒரு பெரிய நாள் இருக்காது, எனவே புதிய உத்வேகங்கள், புதிய உணர்வுகள், புதிய தீர்மானங்களுடன் அதைச் செய்வோம் என்று கூறி தனது உரையை நிறைவுச் செய்தார்.

இவ்விழாவில் கழகத்தின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பும் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகத்தின் பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுக்கூர்ந்து தங்களது நன்றியினை செலுத்தினர்.

 

***

AD/KV



(Release ID: 2045660) Visitor Counter : 42


Read this release in: English