சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஜியோ பார்சி திட்டம் தொடர்பான இணையதளம் - மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்
Posted On:
13 AUG 2024 5:40PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஜியோ பார்சி திட்டம் தொடர்பான இணைய தளத்தை இன்று (13.08.2024) தொடங்கி வைத்தார். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் இக்பால் சிங் லால்புரா, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் திரு கெர்சி கைகுஷ்ரூ தேவூ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, பார்சி சமூகத்தின் வளமான பாரம்பரிய, கலாச்சார சிறப்புகளை எடுத்துரைத்தார். ஜியோ பார்சி என்ற இந்த திட்டம், எதிர்காலத்தில் இந்த சமூகத்திற்கு அதிக பலன்களை அளிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். தகுதி வாய்ந்த பார்சி சமூகத்தினர் இத்திட்டத்தின் பலன்களைப் பெற்று, வலுவான பார்சி சமூகத்தை உருவாக்கி, வலுவான தேசத்தை உருவாக்க அரசுக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த தனித்துவமான திட்டத்திற்கான இணையதளம் பார்சி சமூகத்தினருக்கு உதவும் என்று அமைச்சர் கூறினார். இந்த இணையதளம் மூலம் அவர்கள் விண்ணப்பிக்கவும், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளவும், நிதியுதவி பெறவும் இயலும் என்று அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ஜியோ பார்சி திட்டம் என்பது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு தனித்துவமான மத்திய அரசுத் திட்டமாகும். இது முக்கியமாக பார்சி சமூக மக்கள் தொகையை நிலைப்படுத்த உதவுகிறது. இத்திட்டத்தில் பார்சி சமூக தம்பதிகளுக்கு நிலையான மருத்துவ வசதிகள், குழந்தைப் பராமரிப்பு வசதிகள், முதியோர்கள் பராமரிப்பு ஆகியவற்றுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 400-க்கும் மேற்பட்ட பார்சி குழந்தைகள் இதில் பயன்பெற்றுள்ளனர்.
*******
PLM/DL
(Release ID: 2044948)
Visitor Counter : 69