வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - நகர்ப்புற ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 1 கோடி வீடுகள் கட்டப்படும்
Posted On:
09 AUG 2024 10:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடு கட்டவோ, வாங்கவோ நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரூ. 2.30 லட்சம் கோடி அரசு உதவி வழங்கப்படும்.
நகர்ப்புறங்களில் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற நிலையான வீடுகளை வழங்குவதற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் முக்கிய முன்னோடித் திட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் ஒன்றாகும். இதன் கீழ், 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 85.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர், 15.08.2023 அன்று செங்கோட்டை கொத்தளத்திலிருந்து தமது சுதந்திர தின உரையில், இத்திட்டத்தை அறிவித்திருந்தார்.
தகுதிவாய்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் எழும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வீடுகள் கட்டுவதற்கு கூடுதலாக 3 கோடி கிராமப்புற, நகர்ப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்க மத்திய அமைச்சரவை 10 ஜூன் 2024 அன்று தீர்மானித்தது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு கோடி குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும்.
நாட்டில் எங்கும் பாதுகாப்பான வீடு இல்லாத குறைந்த/நடுத்தர வருமானக் குழு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு வாங்க அல்லது கட்ட தகுதியுடையவர்கள்.
இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரின் தகுதியான குடும்பங்கள், தங்களுக்குச் சொந்தமாக உள்ள காலி நிலத்தில் புதிய வீடுகள் கட்டிக் கொள்ள நிதியுதவி வழங்கப்படும். நிலமற்ற பயனாளிகளைப் பொறுத்தவரை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் நில உரிமைகள் (பட்டாக்கள்) வழங்கப்படலாம்.
*****
PLM/DL
(Release ID: 2044096)
Visitor Counter : 81